கஞ்சா சாக்லேட்,மெத்தா பெட்டமைன் பறிமுதல்!”மாணவர்கள் வாழ்க்கையை அழிக்காதீர்”S.P

கோவை மாவட்டத்தில் போதைப் பொருள் புழக்கத்தை தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில், 50-க்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.
இந்தச் சோதனையில் சிக்கிய போதைப் பொருட்கள் மற்றும் கைது நடவடிக்கைகள் குறித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திகேயன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

கோவை மாவட்டத்தில் காவல்துறை தொடர்ந்து போதைப் பொருளுக்கு எதிரான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும்,பேரூர், கருமத்தம்பட்டி, செட்டிபாளையம், மதுக்கரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 50 இடங்களில் ரகசிய தகவலின் அடிப்படையில், இரண்டு டி.எஸ்.பி, ஒன்பது இன்ஸ்பெக்டர், 300 காவலர்கள் தலைமையில் இந்த அதிரடி சோதனை நடைபெற்றது என்றார் .இந்த சோதனையின் போது 22 வாகனங்களுக்கு உரிய ஆவணங்கள் இன்றி சிக்கியதாகவும், 4.5 கிலோ கஞ்சா, 50 மில்லி கிராம் கஞ்சா ஆயில், சிந்தடிக் ட்ரக்ஸ், மெத்தா பெட்டமைன், கஞ்சா சாக்லேட் இரண்டு கிலோ பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றார்.  இதில் 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்த அவர், 18 பேரை பிடித்து சந்தேகத்தின் பேரில் விசாரணை செய்து வருவதாக கூறினார்.


மேலும் ஐந்து குற்றவாளிகளில் இரண்டு பேர் மீது  ஏற்கனவே வழக்குகள் உள்ளதாகவும்,  இரண்டு பேர் கல்லூரி முடித்து விட்டு இங்கு இருப்பதாகவும், மூன்று பேர் கல்லூரி மாணவர்கள் என்றார்.வெளியில் தனி அறைகள் எடுத்து தங்கி படிக்கும் மாணவர்கள், வெளி மாவட்டத்தில் இருந்து தங்கும் மாணவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என தெரிவித்தார்.

கோவை மாவட்டத்திற்கு வெளியே குற்றம் செய்து விட்டு, இங்கு தங்கி வருவதாகவும், வீட்டு உரிமையாளர்கள் வாடகை விடும் முன்பு அவர்களை நன்றாக விசாரிக்க வேண்டும் என்றும், சந்தேகப்படும் படியாக இருந்தால் உடனடியாக காவல் துறையில் தெரிவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். கல்லூரி நிர்வாகம் அவர்களது நடவடிக்கையில் மாற்றம் இருந்தால், உடனடியாக எச்சரிக்கை வேண்டும் என்றார். மெத்தா பெட்டமைன் எங்கிருந்து வந்தது ? என விசாரித்து வருவதாக தெரிவித்தார்.


மேலும் போதைப்பொருள் ரயிலில் இருந்து வருவதாக தகவல் வந்து உள்ளதாகவும், கடந்த ஆண்டு 670 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றும், ஆன்லைன் மூலமாக விற்பனை செய்வதையும் தடுக்க முயற்சி செய்து வருகிறோம் என்றார். அனைத்து கல்லூரி மாணவர்களிடமும்  அறிவுரை வழங்கி உள்ளதாகவும், ஒரு சில மாணவர்கள் மூலமாக பல்வேறு மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என கூறினார்.

தமிழக கேரளா எல்லையான எட்டிமடை சோதனை சாவடி, வாளையார் சோதனை சாவடி ஆகிய இரண்டு சோதனைச் சாவடிகள் அமைத்து உள்ளதாகவும், குற்றங்கள் அதிகரித்து வருவதால் சோதனை சாவடிகளை அதிகப்படுத்தி கண்காணித்து வருவதாக தெரிவித்தார்.