அற்புத மனிதர்! இறுதிவரை எளிய வாழ்க்கை வாழ்ந்த ஐயா நல்லகண்ணு.. அரசியலில் இவர் ஓரு சகாப்தம்.!!

பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர், மக்கள் தலைவர் கக்கன் வரிசையில் தனது இறுதி மூச்சு வரை மக்களுக்காகவே வாழ்ந்தவர் ஐயா நல்லகண்ணு. இப்படி ஒரு தலைவர் இனி அரசியல் களத்தில் வரப்போவதில்லை என 100 சதவீதம் உறுதியாக சொல்லலாம். ஊரை அடித்து உலையில் போடும் அரசியல் களத்தில் அத்திபூத்தாற்போல் எப்போதாவது ஒருமுறை தான் நல்ல தலைவர்கள் வருவார்கள். அந்த வகையில் பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர், மக்கள் தலைவர் கக்கன் வரிசையில் இடம் பெற்றவர் ஐயா நல்லகண்ணு.

தனது இறுதி மூச்சு வரை மக்களுக்காகவே வாழ்ந்த ஐயா நல்லகண்ணு, அரசியலில் அதியசமாக பணம், பதவி, புகழ் என எதற்கும் ஆசைப்பட்டதில்லை. இந்திய கம்யூனிஸ்டு கட்சியில் பல்வேறு பதவிகளை வகித்து இருந்தாலும் ஒருபோதும் அவர் பணம் மீது நாட்டம் கொண்டதில்லை.கட்சி சார்பாகவும், அரசு சார்பாகவும் தனக்கு கிடைத்த பணம், ஆடம்பர பொருட்களை அவர் கட்சிக்கும், மக்களுக்கும் தான் திருப்பி கொடுத்து வந்தார். இதற்கு பல உதாரணங்கள் உள்ளன. நல்லகண்ணுவின் 80வது பிறந்தநாளில் கட்சி சார்பாக அவருக்கு ரூ.1 கோடி பணமும், ஆடம்பர காரும் பரிசளிக்கப்பட்டது. இதை பெற்றுக்கொண்ட அவர் அடுத்த நொடியே ‘இது கட்சியின் பணம்; எனக்கெதுக்கு?’ என்று கூறி அதை திருப்பி கொடுத்து விட்டார்.அண்மையில் தமிழக அரசு நல்லகண்ணுவுக்கு ‘தகைசால் தமிழர்’ விருது வழங்கியது. அத்துடன் ரூ.10 லட்சம் தொகையும் வழங்கப்பட்டது. ஆனால் இதைபெற்றுக்கொண்ட அடுத்த நொடியே அதனையும், தான் வைத்திருந்த ரூ.5,000யும் சேர்த்து முதலமைச்சர் நிவாரண நிதிக்கு திருப்பி வழங்கினார் இந்த நேர்மையின் சிகரம். இது மட்டுமின்றி அவருக்கு பல்வேறு அமைப்புகள் வழங்கிய பரிசுத்தொகைகளையும் கட்சியின் நலனுக்காவும், பொது நலனுக்காகவும் வழங்கினார்.

கோடி கோடியாய் சொத்துகள் சேர்த்துக் கொண்டு பணம், புகழ், பதவியில் மிதக்கும் நவீனகால அரசியல் தலைவர்களுக்கு மத்தியில் ஒரு ரூபாய் கூட சொத்து சேர்க்காமல் அரசியலில் அதியசமாய் விளங்கினர் நல்லகண்ணு.

கடந்த 2011 தேர்தலில் தேர்தல் ஆணையத்தில் அவர் தாக்கல் செய்த சொத்து விவரத்தில் தன்னிடத்தில் வெறும் ரூ.5,000 மட்டுமே கையிருப்பு இருப்பதாக கூறியிருந்தார். சுதந்திரப் போராட்ட வீரர் என்பதால் அவருக்கு மாதம்தோறும் வழங்கப்பட்ட தியாகிகள் ஓய்வூதியத் தொகையான ரூ.2 ஆயிரத்தை தன்னுடைய செலவுகளுக்காக பயன்படுத்திக் கொண்டார்.

மேலும் கட்சி சார்பாக வழங்கப்பட்ட மிகக்குறைந்த ஊக்கத்தொகையையும் பெரும்பாலான நேரங்களில் கட்சியின் நலனுக்கே வழங்கி விட்டார். இது மட்டுமின்றி ஆரம்பட உடைகளை தவிர்த்த அவர் எப்போதும் வெள்ளை வேட்டி, சட்டையில் எளிமையாக வலம் வருவார். அரசு பேருந்துகளையே பயன்படுத்தியே எங்கும் செல்வார்.

இவ்வளவு ஏன் உடல்நிலை சரியில்லாதபோதும் கூட தனியார் மருத்துவனைகளை நாடாமல் அரசு மருத்துவமனையில் தான் சிகிச்சை பெறுவேன் என்பதில் பிடிவாதமாக இருந்து, அங்கு இருந்தே நம்மை விட்டு பிரிந்துள்ளார் ஐயா நல்லகண்ணு. இப்படி ஒரு தலைவர் இனி அரசியல் களத்தில் வரப்போவதில்லை என்பதை நாம் 100% உறுதியாக சொல்லலாம்.