பழனி தைப்பூசத் தேரோட்டம்!

தைப்பூசத்தின் முக்கிய நிகழ்வான தைப்பூசத் தேரோட்டம் இன்று நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா அரோகரா என்று கோஷமிட்டபடி தேரை வடம் பிடித்து இழுத்து வழிபட்டனர்.

அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் தைப்பூச திருவிழா கடந்த 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் நடைபெறும் தைப்பூச திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று நடைபெற்றது. ஊர்க்கோவிலான பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் முன்னதாக,  அருள்மிகு முத்துக்குமாரசுவாமி-வள்ளி,தெய்வானை சமேதராக தேர்‌ஏறும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து மாலை 4.மணியளவில் தொடங்கிய தேரோட்டம், நான்கு ரத வீதிகளில் வலம் வந்தது.  ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து திருத்தேரை இழுத்தனர்.

வள்ளி, தெய்வயானை சமேதராக‌ தேரில்  எழுந்தருளிய அருள்மிகு முத்துக்குமாரசுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தேராட்டத்தில் பழனி கோவில் இணை ஆணையர் மாரிமுத்து,  அரசு அதிகாரிகள், பழனி நகர முக்கிய பிரமுகர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். வருகிற பிப்ரவரி 4ம் தேதி இரவு தெப்பத் தேரோட்டம், தொடர்ந்து கொடியிறக்க நிகழ்ச்சியுடன் தைப்பூசத் திருவிழா நிறைவடைகிறது. தைப்பூசத்தை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து மலை அடிவாரம் கிரிவலம் பாதையில் பல்வேறு காவடிகள் எடுத்து ஆடி பாடியும்  5 மணி நேரம் வரை காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.