திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் வழக்கில் உச்சநீதிமன்றம் தடை மறுத்த நிலையில், உயர்நீதிமன்றத் தீர்ப்பை தமிழக அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும் எனவும், நீதிமன்ற உத்தரவுகளுக்கு முழு மரியாதை செலுத்துவதும், பக்தர்களின் மத உணர்வுகளையும் அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய வழிபாட்டு உரிமைகளையும் மதிப்பதும் அரசின் கடமை என இந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிக்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் தொடர்பாக உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்திருப்பது, நீதிமன்ற உத்தரவுகளின் முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்தும் நிகழ்வாகும்.
இந்நிலையில்,புதிய நடைமுறைகளை அனுமதிக்க முடியாது என்ற நிலைப்பாட்டுடன் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் மனு தாக்கல் செய்திருப்பது, பல இந்து பக்தர்களிடையே ஏமாற்றத்தையும் கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
இந்து சமய அறநிலையத்துறையின் அடிப்படை நோக்கம், கோவில்களின் நிர்வாகத்தைச் சிறப்பாக மேற்கொள்வதும், பக்தர்களின் வழிபாட்டு உரிமைகள் மற்றும் கோவில் மரபுகளை சட்டத்திற்குட்பட்டு பாதுகாப்பதுமாகும். எனவே, பக்தர்களின் நீண்டகால மத வழக்கங்கள் தொடர்பான விவகாரங்களில், பக்தர்களின் நம்பிக்கைகளுக்கும் நீதிமன்ற உத்தரவுகளுக்கும் உரிய மரியாதை அளிக்கும் அணுகுமுறையே கடைப்பிடிக்கப்பட வேண்டும்.கோவில் உண்டியலில் பக்தர்கள் மற்றும் உபயதாரர்கள் செலுத்தும் காணிக்கை, கோவில்களின் பராமரிப்பு, வழிபாடு மற்றும் பக்தர்களின் நலனுக்காகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற பொதுமக்களின் எதிர்பார்ப்பு உள்ளது. எனவே, இத்தகைய வழக்குகளில் அரசு மற்றும் அறநிலையத்துறையின் நடவடிக்கைகள் வெளிப்படைத்தன்மையுடனும் பொறுப்புடனும் இருக்க வேண்டும். கடந்த ஆட்சிக் காலத்தில் திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பாக ஏற்பட்ட சர்ச்சைகள் மற்றும் நீதிமன்ற உத்தரவுகளைச் சுற்றிய விவாதங்கள் மக்களிடையே பரவலாக பேசப்பட்டன.
தற்போதைய அரசும் உயர்நீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதில் தாமதம் ஏற்படாமல் செயல்பட வேண்டும் என்பதே பக்தர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை வழங்க மறுத்துள்ள நிலையில், உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு காலதாமதமின்றி மேற்கொள்ள வேண்டும். நீதிமன்ற உத்தரவுகளுக்கு முழு மரியாதை செலுத்துவதும், பக்தர்களின் மத உணர்வுகளையும் அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய வழிபாட்டு உரிமைகளையும் மதிப்பதும் அரசின் கடமையாகும். பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை என்ற வேறுபாடின்றி அனைத்து குடிமக்களின் மத உரிமைகளையும் சமமாகக் காக்கும் நிர்வாகமே ஜனநாயகத்தின் அடிப்படை. எனவே, திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் தொடர்பாக அரசு சட்டத்தின் ஆட்சியையும் நீதிமன்ற உத்தரவுகளையும் முழுமையாக செயல்படுத்தி, பக்தர்களின் நம்பிக்கைக்கு உரிய மரியாதை வழங்க வேண்டும்.” என கூறியுள்ளார்.









