உதயநிதி மன்னிப்பு கேட்க வேண்டும் – குஷ்பு எச்சரிக்கை

நடிகையும் பாஜக நிர்வாகியுமான குஷ்பு சுந்தர், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

நடிகை திரிஷா குறித்து அவர் கூறியதாகக் கூறப்படும் கருத்து பெண்களை அவமதிக்கும் வகையிலானது என்றும், அப்படிப்பட்ட கருத்தை கூறியவர் தன்னை ஒரு தலைவராக அழைத்துக்கொள்ளவே வெட்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நேற்று முன்பு தஞ்சையில் திமுக சார்பில் காவிரி விவகாரம் குறித்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சி தலைவரான உதயநிதி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் ஆளும் தவெக அரசை மிக கடுமையாக விமர்சித்து பேசினார். மேலும், அவர் முதல்வர் மற்றும் நடிகை குறித்தும் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக தவெக பெண் நிர்வாகி அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. நேற்றைய தினம் உதயநிதி சென்னையில் கைது செய்யப்பட்டார். சாலை மார்க்கமாக அவரை தஞ்சைக்கு அழைத்து சென்றனர். இருப்பினும், தஞ்சையில் திமுகவினர் அதிகளவில் திரண்டதால் செங்கிப்பட்டி காவல் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். சுமார் 1.30 மணி நேரம் விசாரணை நடந்த நிலையில், அதன் பிறகு உதயநிதி விடுவிக்கப்பட்டார். இதற்கிடையே உதயநிதி விவகாரம் தொடர்பாக ஆங்கில ஊடகமான என்டிடிவிக்கு குஷ்பு பேட்டி அளித்தார். அதில் அவர், “உதயநிதி பேசியது என்னை ஆச்சரியப்படுத்தவில்லை. திமுகவில் பெண்களை இழிவுபடுத்தும், பாலின பாகுபாடு நிறைந்த பேச்சுகளை நான் இதற்கு முன்பும் பார்த்திருக்கிறேன். அதுதான் இப்போதும் தொடர்கிறது.

உதயநிதி ஸ்டாலினிடம் இருந்து இதை நான் எதிர்பார்க்கவில்லை. அவர் இளைஞர், எதிர்க்கட்சி தலைவர், முன்னாள் துணை முதல்வர், இளைஞர் நலத்துறை அமைச்சர். அதனால் மற்றவர்களைவிட வித்தியாசமாக இருப்பார் என்று நினைத்தேன். ஆனால் மிகவும் அருவருப்பான, ஆபாசமான, தரமற்ற கருத்துகளை அவர் பேசியிருக்கிறார். அதற்காக அவரிடம் சிறிதளவும் வருத்தம் கூட இல்லை.ஒரு பெண்ணை பொது மேடையில் அவமதிக்க உங்களுக்கு யார் அந்த உரிமையை கொடுத்தது? இது உதயநிதி ஸ்டாலின் மட்டும் செய்யும் விஷயம் அல்ல. எல்லா அரசியல் கட்சிகளிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கின்றன. இன்னும் எவ்வளவு காலம் பெண்களை இழிவுபடுத்தப் போகிறீர்கள்? ஒரு பெண்ணை அவமதித்து தான் தன்னை வலிமையான தலைவர் என்று நிரூபிக்க வேண்டுமா? உங்களை தலைவர் என்று சொல்லிக்கொள்வதற்கே வெட்கப்பட வேண்டும்” என்று கடுமையாக விமர்சித்தார்.

திமுக தலைவர்கள் இதற்கு முன்பும் பெண்கள் குறித்து இழிவாக பேசியுள்ளதாக குஷ்பு குற்றம்சாட்டினார். பெண்களை தரக்குறைவாக பேசிய திமுக நிர்வாகிகள், பெரியளவில் மட்டும் திமுகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டு மீண்டும் சேர்க்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். அவர் மேலும், “நீங்கள் உண்மையில் ஆண்மையுள்ளவராக இருந்தால், ஒரு பெண்ணை அவமதிக்காமல் அரசியல் செய்யுங்கள். அப்படி செய்ய முடியுமா என்று பார்ப்போம்” என்றும் கடுமையாக பேசினார்.

அவர் மேலும், திமுக ஒரு மாய உலகத்தில் வாழ்ந்து கொண்டிருந்தது. யாராலும் எங்களை எதுவும் செய்ய முடியாது என்று நினைத்து கொண்டிருந்தார்கள். ஆனால் இந்த தேர்தலில் அந்த மாய பலூன் உடைத்துவிட்டது. திமுகவுக்கே அவர்களது சொந்த கட்சியினர் கூட வாக்களிக்கவில்லை. அவர்களது குடும்ப உறுப்பினர்களே திமுகவுக்கு வாக்களிக்கவில்லை. உதயநிதி பேச்சு பெண்களை இழிவாக பார்க்கும் மோசமான மனநிலையை தான் வெளிப்படுத்துகிறது” என்றார்.