கோவையில் சட்ட விரோதமாக மது விற்ற 6 பேர் கைது..!

கோவை சரவணம்பட்டி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் நேற்று முன்தினம் இரவில் கணபதி எப். சி.ஐ ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடை அருகே ரோந்து சுற்றி வந்தார். அப்போது சட்ட விரோதமாக மதுபாட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக பார் ஊழியர்கள் புதுக்கோட்டை மாவட்டம் பிரேம்குமார் (வயது 33) கண்ணன் (வயது 35) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து 70 மது பாட்டில்களும், ரு19,480 பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல சரவணம்பட்டி கீரணத்தம் ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடை அருகே மது விற்றதாக சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ராமலிங்கம் (வயது 33) கைது செய்யப்பட்டார். இவரிடம் இருந்து 29 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

சரவணம்பட்டி சிவானந்தபுரம் சத்தி ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடை அருகே மது விற்றதாக ராமநாதபுரம் சதீஷ்குமார் (வயது 37 )கைது செய்யப்பட்டார். இவரிடம் இருந்து 15 மதுபாட்டில் பறிமுதல் செய்யப்பட்டது. இவர்கள் 3பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதே போல இடையர் வீதியில் மது விற்றதாக சின்மயின் ( வயது 47)கைது செய்யப்பட்டார். ரத்தினபுரி 7-வது வீதியில் மது விற்றதாக முத்துக்குமார் நகரை சேர்ந்த சேகர் (வயது 38 )கைது செய்யப்பட்டார். இருகூர் ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடை அருகில் மது விற்றதாக சின்னியம்பாளையத்தைச் சேர்ந்த தர்மராஜ் (வயது 27) கைது செய்யப்பட்டார்.மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது..