திருப்பூரில் சொகுசு காருடன் 527 கிலோ புகையிலை குட்கா பறிமுதல் – இருவர் கைது..!

தமிழகத்தில் குட்கா புகையிலை பொருட்கள் மீது தமிழக அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில் சட்டவிரோதமாக குட்கா புகையிலை பொருட்களை விற்பனை செய்து வரும் நபர்கள் மீது காவல்துறையினர் அவ்வப்பொழுது கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் திருப்பூர் மாநகர ஆணையர் பிரவீன் குமார் அபினபு உத்தரவின் பேரில் மாநகர துணை ஆணையர் வனிதா தலைமையில் நல்லூர் காசிபாளையம் அருகே வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது அவ்வழியாக வந்த இன்னோவா சொகுசு காரை நிறுத்தி சோதனை செய்ததில் அதில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் இருந்ததை தொடர்ந்து காரில்
வந்து இருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் இருவரும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன், ஐயப்பன் என்பது தெரிய வந்தது அதனை தொடர்ந்து காரில் எடுத்துவரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்பிலான 527 கிலோ குட்கா புகையிலை பொருட்களையும் சொகுசு காரையும் பறிமுதல் செய்த போலீசார் நல்லூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதே போல திருப்பூர் திருமுருகன்பூண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நெரிப்பறிச்சல் பகுதியில் மளிகை கடையில் பதுக்கி வைக்கப்பட்டு விற்பனை செய்து வந்த 125 கிலோ புகையிலை குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். தொடர்ந்து காவல்துறையினர் குட்கா பொருட்களை பறிமுதல் செய்து வந்த போதிலும் திருப்பூர் மாநகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஆங்காங்கே வீடுகளை வாடகைக்கு எடுத்தும் சொகுசு கார்களை பயன்படுத்தியும் இதுபோன்று குட்கா பொருட்களை விற்பனை செய்து வருவதாகவும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.