தூத்துக்குடியில் போலி சான்றிதழ், அரசு முத்திரைகள் தயாரித்த 5 பேர் கைது..!

தூத்துக்குடி இந்திரா நகரை சேர்ந்தவர் வந்தியத்தேவன் (64). தனது நிலத்துக்கு உரிய பத்திரம் தொலைந்து விட்டதால் அதற்கான நகல் பெற முயற்சி செய்தார். இதனால் தனது நண்பர் ஒருவரிடம் தெரிவித்தார். இதனை தொடர்ந்து அவரிடம் இருந்து பணம் பெற்றுக் கொண்ட அந்த நண்பர், தனது நண்பர்களான புஷ்பா நகரை சேர்ந்த அசோகர் (65) உள்பட 4 பேருடன் சேர்ந்து ஒரு போலீஸ் மனு ஏற்பு ரசீது கொடுத்து உள்ளார்.

அந்த மனு ரசீதை பெற்றுக் கொண்ட வந்தியத்தேவன், அதனை உண்மை என்று நம்பி, தென்பாகம் காவல் நிலையத்தில் கொடுத்து ஆவணத்தை கண்டுபிடிக்க முடியவில்லை என்பதற்கான போலீஸ் சான்றிதழ் பெறுவதற்காக விண்ணப்பித்து உள்ளார். அப்போது மனு ரசீதை தென்பாகம் போலீசார் ஆய்வு செய்து உள்ளனர். அது போலியான ரசீது என்பது தெரியவந்துள்ளது.

இதனை அறிந்த வந்தியத்தேவன் அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், 5 பேர் சேர்ந்து போலி ஆவணம் தயாரித்து கொடுத்து இருப்பது தெரியவந்தது. உடனடியாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அசோகர் உள்பட 5 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில், பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், எஸ்.எஸ்.எல்.சி. மதிப்பெண் பட்டியல் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களை போலியாக தயாரித்து கொடுத்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் போலீசார், கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து காவல் நிலையங்களின் சீல்கள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், மாநகராட்சி ஆணையாளர், தாசில்தார்கள் உள்ளிட்ட பல்வேறு அரசு அதிகாரிகளின் ரப்பர் ஸ்டாம்பு முத்திரைகளையும் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக மேலும் சிலரையும் போலீசார் தேடி வருகின்றனர்.இந்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.