கணவரை கொலை செய்து நாடகமாடிய மனைவி, மகள்கள் உட்பட 4 பேர் கைது..!

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள தலையால் நடந்தான்குளம் கிராமம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் காளிமுத்து. ஓய்வு பெற்ற போலீஸ்காரர். இவரது மகன் செல்வக்குமார் (43) கட்டிடதொழிலாளி. இவரது மனைவி பாக்கிய லட்சுமி. இவர்களுக்கு சுதர்ஷினி(23), கார்த்திகா (19) ஆகிய 2 மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டின் மாடியில் செல்வக்குமார் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதையடுத்து செல்வக்குமார் உடலை, அவரது குடும்பத்தினர் அடக்கம் செய்ய முயன்றுள்ளனர். ஆனால் அவரது உடலில் காயங்கள் இருந்ததால் அக்கம் பக்கத்தினர் கயத்தாறு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

கோவில்பட்டி டிஎஸ்பி வெங்கடேஷ், கயத்தாறு இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், சப்-இன்ஸ்பெக்டர் அந்தோணி திலீப் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று செல்வக்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து சந்தேகத்தின் பேரில் செல்வக்குமாரின் மனைவி பாக்கியலட்சுமி, மகள்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது பாக்கியலட்சுமி தனது மகள்களுடன் சேர்ந்து செல்வக்குமாரை கொலை செய்தது தெரிய வந்தது. செல்வக்குமாருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாகவும், இதனால் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் செல்வகுமார், பாக்கியலட்சுமி மீது சந்தேகம் அடைந்துள்ளார். இதற்கிடையே மூத்தமகள் சுபாஷினிக்கும், அப்பகுதியை சேர்ந்த கந்தவேல் (23) என்பவருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது.

செல்வக்குமார் தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் மனமுடைந்த பாக்கிய லட்சுமி மகள்களுடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளார். இதையறிந்த கந்தவேல், செல்வக்குமாரை கொலை செய்யலாம் என கூறியுள்ளார். அதன்படி சம்பவவத்தன்று இரவில் வீட்டின் மாடியில் தூங்கிக் கொண்டிருந்த செல்வகுமாரை, பாக்கியலட்சுமி, அவரது மகள்கள் சுபாஷினி, கார்த்திகா, கந்தவேல் ஆகியோர் சேர்ந்து தலையணையால் அமுக்கி கொலை செய்துள்ளனர்.

பின்னர் காலையில் செல்வக்குமார் குடிபோதையில் தண்ணீர் இல்லாமல் இறந்து கிடந்ததாக அக்கம் பக்கத்தில் தெரிவித்தனர். ஆனால் உடலில் காயங்கள் இருந்ததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததால் போலீசார் விசாரணையில் கொலை செய்யப்பட்டது அம்பலமானது. இதையடுத்து செல்வக்குமாரின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.