வெள்ளி கிரகத்தின் மேகங்களில் ஏலியன்கள்.. பூமியில் கிடைக்கும் பொருள் அங்கு எப்படி இருக்கு..? நாசா ஆராய்ச்சி..!!

னித சமூகம் கடந்த சில நூற்றாண்டுகளாகவே வேற்றுகிரக வாசிகள் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது. மனிதன் நிலவில் கால் வைத்தது முதல் செவ்வாய் கிரக ஆராய்ச்சிகள், ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி வரை என அனைத்துமே வேற்றுகிரக வாசிகளை தேடும் ஒரு அங்கம்தான்.

விண்வெளியில் எங்காவது ஒரு இடத்தில் ஒரு சின்ன உயிரினம் இருந்துவிடாதா என்று தொடர் ஆய்வுகளை செய்து வந்தாலும், இதுவரை அவர்களால் எந்த ஒரு ஏலியனையும் அதிகாரப்பூர்வமாக கண்டுபிடிக்க முடியவில்லை.

ஏலியன்கள் என்று சொன்னாலே மக்கள் உடனே பறக்கும் தட்டும் குறித்து பேசுவார்கள். வித்தியாசமான பறக்கும் தட்டுக்களை பார்த்ததாக மக்கள் பலர் புகார் வைப்பது உண்டு. இந்நிலையில்தான், சூரிய குடும்பத்திற்கு உள்ளேயே ஏலியன்கள் இருக்க வாய்ப்பு உள்ளதாக பிரபல நாசா விஞ்ஞானி டாக்டர் மிஷேல் தாலர் அதிர்ச்சி தகவலை கூறியிருக்கிறார். சூரிய குடும்பத்தில் 2-வது கிரகமாக இருக்கும் வெள்ளி கிரகத்தை வைத்து இந்த கருத்தை அவர் தெரிவித்துள்ளார்.

வெள்ளி கிரகத்தின் அமில மேகங்கள் மற்றும் அதன் எரியும் வெப்பநிலையால், அதில் உயிரினங்கள் வசிக்க முடியாத சூழல் உள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக வீனஸ் ஏலியன்கள் பற்றிய ஆய்வில் முதல் தேர்வில் எப்போதும் இல்லை. ஆனால், டாக்டர் தாலரின் வழக்கத்திற்கு மாறாக வேறு ஒரு வாதத்தை முன்வைக்கிறார். அதாவது, அவர் வெள்ளி கிரகத்தின் வளிமண்டல அறிகுறிகளை குறிப்பிட்டுள்ளார். இந்த வளிமண்டலத்தில் காணப்படும் சில விஷயங்கள் வெள்ளி கிரகத்தில் உயிரினங்கள் இருப்பதற்கான அறிகுறியாக தனக்கு தெரிவதாக கூறியிருக்கிறார்.

மேலும், இந்த கிரகத்தின் வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்சைட் அதிகம் உள்ளதாகவும், சில வகை பாக்டீரியாக்கள் இருந்தால் மட்டுமே இந்த அளவிற்கு கார்பன் டை ஆக்சைட் இருக்க முடியும் என்றும் இதனால் வெள்ளி கிரகத்தின் மேகங்களில் இந்த பாக்டீரியா உயிரினங்கள் இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அங்கு மனிதர்கள் இருக்க வாய்ப்பு இல்லை. ஆனால், வேற்று கிரக உயிரினங்கள் பாக்டீரியா வடிவில் இருக்க வாய்ப்பு உள்ளது என்று கூறியுள்ளார்.

வெள்ளி கிரகத்தின் மேகங்களில் பாஸ்பைன் வாயு இருப்பதை கடந்த 2020ஆம் ஆண்டு விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். அதன் 2ஆம் கட்ட ஆய்வில் பாஸ்பைன் கண்டுபிடிக்கப்படாத நிலையில், மீண்டும் நடத்தப்பட்ட தீவிர ஆய்வில் பாஸ்பைன் அங்கே இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் வெள்ளி கிரகத்தின் மேகங்களில் ஏலியன்கள், அதாவது வேற்று கிரக உயிரினங்கள் இருக்குமோ என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் வெள்ளி கிரகம் வாழ தகுதி கொண்டதாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. பூமியில் மட்டும் அதிகமாக காணப்படும் ஒரு பொருள், பூமிக்கு வெளியே கண்டறியப்பட்டுள்ளது விஞ்ஞானிகள் இடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.