பொங்கல் பரிசு ரூ.1000 வாங்காத 4.40 லட்சம் பேர்.. கூட்டுறவு துறை தகவல்..!

சென்னை: தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பரிசாக வழங்கிய அரிசு, பருப்புடன், ரூ. 1,000 ரூபாயை 4.40 லட்சம் பேர் வாங்கவில்லை என கூட்டுறவுத்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து செய்திக்குறிப்பையும் வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் உள்ள ரேசன் கடைகளில் பொங்கல் பரிசு தொகை 1000 ரூபாய், 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை வழங்க முதலவர் ஸ்டாலின் கடந்த மாதம் உத்தரவிட்டிருந்தார்.

பொங்கல் பரிசு பெற 2 கோடியே 18 லட்சத்து 86 ஆயிரத்து 123 அட்டைதாரர்கள் தகுதி பெற்றவர்கள் என்று கூறியிருந்த நிலையில், அதற்காக ரூ.1000 ஒதுக்கி அந்தந்த ரேஷன் கடைகளுக்கும் அனுப்பப்பட்டது.

அதன்படி தகுதியுள்ள 2 கோடியே 18 லட்சத்து 86 ஆயிரத்து 123 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 பணம் ஒதுக்கப்பட்டு அந்த தொகை ரேசன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. சென்னையில் மட்டும் 10,18,728 அட்டைதாரர்கள், தென்சென்னையில் 10,39,552 குடும்ப அட்டைகளுக்கும் தலா ரூ.1000 ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து, பொங்கலையொட்டி, ஒரு வாரம் பொங்கல் பரிசு விநியோகிக்கப்பட்டது. இதை பெரும்பாலான அட்டைதாரர்கள் வாங்கி செல்ல ஆர்வம் காட்டினார்கள். ஆனாலும், ஒருசிலர் 1000 பணம் வேண்டாம் என்று விட்டுவிட்டனர்.

ஆனாலும் இதுகுறித்து சிவில் சப்ளை அதிகாரி ஒருவர் சில நாட்களுக்கு முன்பு சொல்லும்போது, பொங்கல் தொகுப்பு பெரும்பாலானவர்களுக்கு கொடுக்கப்பட்டுவிட்டன. இதுவரையில் வாங்காமல் இருந்தால் வாங்கிக் கொள்ளலாம். ரூ.1000 ரொக்கம் கொடுப்பது நிறுத்துவது குறித்து அரசிடம் இருந்து எந்த உத்தரவும் வரவில்லை. அதனால் தொடர்ந்து வினியோகித்து கொண்டு இருக்கிறோம் என்று கூறியிருந்தார். ஆனால், இந்த 1000 ரூபாய் பணத்தை, தமிழ்நாடு முழுவதும் 4 லட்சத்து 39 ஆயிரத்து 669 குடும்ப அட்டைதாரர்கள் வாங்கவில்லை என்று தற்போது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து, கூட்டுறவுத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, “வடசென்னையில் 10,18,728 அட்டைதாரர்கள், தென்சென்னையில் 10,39,552 குடும்ப அட்டைகளுக்கும் தலா ரூ.1000 ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. அதில், வடசென்னையில் 9 லட்சத்து 83,005 பேரும், தென்சென்னையில் 9 லட்சத்து 90,014 பேரும் ரூ.1000 வாங்கியுள்ளனர். மீதமுள்ளவர்கள் பொங்கல் பரிசுத்தொகுப்பை வாங்கவில்லை என்று தெரிகிறது.

அத்துடன் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 8,026 அட்டைதாரர்களும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 10,263 அட்டைதாரர்களும் திருவள்ளூர் மாவட்டத்தில் 8,874 அட்டைதாரர்களும் ரூ.1000 பரிசு தொகுப்பு வாங்கவில்லை. 4 லட்சத்து 39 ஆயிரத்து 669 குடும்ப அட்டைதாரர்களுக்கான பொங்கல் பரிசு தொகை, ரூ.43 கோடியே 96 லட்சத்து 69 ஆயிரம் பணம் அரசுக்கு திரும்பி வந்துள்ளதாகவும் கூட்டுறவுத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.