யூடியூபர் சங்கருக்கு 3 ஆண்டு சிறை – எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு

பெண் செய்தி வாசிப்பாளர் தொடர்ந்த அவதூறு வழக்கில் யூடியூபர் சங்கருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2013-14 காலகட்டத்தில் செய்தி வாசிப்பாளரும் வழக்கறிஞருமான மகாலட்சுமி குறித்து சங்கர் தனது இணையதளத்தில் அவரது தனிப்பட்ட வாழ்க்கையைச் சித்தரித்து அவதூறான கட்டுரைகளை வெளியிட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து யூடியூபர் சங்கர் மீது, தன்னை மிரட்டிப் பணம் பறிக்க முயன்றதாக மகாலட்சுமி தரப்பில் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் போலீசார் சங்கர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கின் காரணமாக கடந்த 2014ல் இணையதளத்தை முடக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கு எழும்பூர் நீதிமன்றத்தில் நீண்ட நாட்களாக விசாரணையில் இருந்தது. இந்நிலையில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், இந்த வழக்கில் எழும்பூர் நீதிமன்ற கூடுதல் மெட்ரோ பாலிட்டன் மாஜிஸ்திரேட் சிவசக்தி நேற்று தீர்ப்பளித்தார்.
தீர்ப்பில் சங்கர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது. இந்த தீர்ப்பின் மீது மேல் முறையீடு செய்வதற்காக சங்கருக்கு 30 நாள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதற்குள் தடை உத்தரவு பிறப்பிக்காவிட்டால் சிறை செல்ல வேண்டிய நிலை ஏற்படும்.