தமிழக காவல் துறையின் புதிய மின்னணு சமூக சேவைப் பதிவேடு (e-CSR) வசதியை டிஜிபி அலுவலகத்தில், டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் நேற்று தொடங்கி வைத்தார்.
இத்திட்டம் குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
தமிழக காவல்துறை இணையதளம் மூலம் பொதுமக்கள் ஏற்கெனவே புகார் அளிக்கும் வசதி இருந்து வருகிறது. ஆனால், புகாருக்கான சிஎஸ்ஆர் நகலைப் (புகார் அளித்ததற்கான ஒப்புகை) பெறுவதற்கு காவல் நிலையத்துக்கு நேரில் செல்ல வேண்டிய நிலை இருந்தது. பொதுமக்களின் இந்த சிரமத்தைப் போக்கும் வகையில் தற்போது இ-சிஎஸ்ஆர் (e-CSR) வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் இனி வீட்டில் இருந்தபடியே தங்களது புகார்களை இணையதளம் வழியாகப் பதிவு செய்யலாம்.இதற்காக தமிழ்நாடு காவல்துறை இணையதளமான https://www.police.tn.gov.in என்ற முகவரிக்குச் சென்று, அதில் உள்ள ‘Register Complaint / e-CSR’ என்ற வசதியைத் தேர்வு செய்து புகாரை பதிவு செய்ய வேண்டும். புகார் பதிவு செய்தவுடன், அது தானாகவே இ-சிஎஸ்ஆர் ஆக பதிவு செய்யப்பட்டு, தனித்துவமான இ-சிஎஸ்ஆர் எண்ணுடன் கூடிய ஒப்புகை குறுஞ்செய்தி மூலம் உடனடியாக புகார்தாரரின் செல்போனுக்கு அனுப்பப்படும். அதன்பிறகு, அந்தப் புகார் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு விசாரணை தொடங்கப்படும்.புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் விபரங்களை பொதுமக்கள் காவல்துறை இணையதளத்தில் உள்ள ‘சிட்டிசன் போர்டல்’ பகுதியில் தெரிந்து கொள்ளலாம். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங் கள் தொடர்பான புகார்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.இதற்காக தனி கண்காணிப்பு ‘டேஷ்போர்டு’ (Dashboard) அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இ-சிஎஸ்ஆர் புகார்கள் மற்றும் அவற்றின் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகளை உயர் காவல்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்பார்கள். யார் மீதேனும் பொய் புகார் அளிக்க நினைத்தால், காவல் நிலைய விசாரணையில் தெரிந்து விடும். மேலும், பொய் புகார் அளித்தவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.இ-சிஎஸ்ஆர் வசதி என்பது அவசரகால உதவிக்கானது அல்ல. அவசரநிலையில் இருப்பவர்கள் உடனடியாக காவல்துறையின் 100 அல்லது 112 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும். அவசர உதவி தேவைப்படும் பெண்கள், 1091 என்ற மகளிர் உதவி எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் தலா 6 சிசிடிவி கேமராக்கள் பொருத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாநில குற்ற ஆவணக் காப்பக டிஜிபி சஞ்சய் மாத்தூர், சட்டம்-ஒழுங்கு கூடுதல் டிஜிபி அன்பு ஆகியோர் கலந்து கொண்டனர்.
டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, ”தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை சிறப்பாக பாதுகாத்து வருகிறோம். குற்றச்செயல்களில் தொடர்ந்து ஈடுபடும் ரவுடிகள், சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் மற்றும் பிரச்சினைக்குரிய நபர்களைக் கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் 1,919 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒரு சதவீதம் மட்டுமே ரவுடி கொலை நடைபெறுகிறது. 90 சதவீத கொலைகள் குடும்ப விவகாரம் உள்பட பல்வேறு காரங்களால் நடைபெறுகிறது. செஞ்சியில் காணாமல் போன சிறுமி தொடர்பான வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர். விரைவில் நல்ல செய்தி கிடைக்கும். தமிழகத்தில் குற்றங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், ரவுடிகள் ஒழிப்பு நடவடிக்கை, போதைப்பொருள் தடுப்பு, ரோந்துப் பணி மற்றும் கண்காணிப்பு தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும்” என்றார்.






