24 மணி நேரமும் ரோந்து மற்றும் வாகன சோதனை- அசத்தும் கோவை போலீஸ்..!!

கோவையில் இரவு பகலாக ரோந்து மற்றும் வாகன சோதனையில் போலீசார்.

கடந்த 23 ஆம் தேதி கோவை உக்கடம் பகுதியில் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே கார் சிலிண்டர் வெடித்த விபத்தில் ஜமேசா முபின் என்பவர் உடல் கருகி உயிரிழந்தார். இந்த வழக்கு தொடர்பாக காவல் துறை உயர் அதிகாரிகளின் நேரடி கண்காணிப்பின் கீழ் மேற்கொண்ட புலன் விசாரணையில் கோவையில் சதி திட்டம் அரங்கேற்ற திட்டமிட்டதும், இறந்த முபின் வீட்டில் கிலோ கணக்கில் வெடி பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த வழக்கில் இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது உபா சட்டம் பாய்ந்துள்ள நிலையில், நேற்று இரவு இறந்த முபினின் உறவினரான அஃப்சர் கான் என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நேற்று முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற சட்டம் ஒழுங்கு குறித்தான ஆலோசனைக் கூட்டத்தில், கோவையில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள், புதிய காவல் நிலையங்கள் அமைப்பது, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது போன்றவற்றை குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதனடிப்படையில், கோவை மாநகரின் பல்வேறு பகுதிகள் போலீஸ்காரன் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. குறிப்பாக சுந்தராபுரம், போத்தனூர் சந்திப்பு, ஆத்துப்பாலம், உக்கடம், டவுன்ஹால், புல்லுக்காடு, ரயில் நிலையம், சுங்கம் நெடுஞ்சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சோதனைச் சாவடிகளில் இரவு, பகலாக காவல் ஆய்வாளர் தலைமையில் தலா 30 காவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மாநகர பகுதிக்கு வரும் அனைத்து இரு சக்கர, கார், சரக்கு வாகனங்கள் முழுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகிறது.
மேலும், உக்கடம் பகுதியில் சிறப்பு அதிரடிப்படை (RAF) வீரர்களும், கோட்டை ஈஸ்வரன் கோவில் பகுதியில் சி.ஆர்.பி.எப் வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.