கோவை கார் வெடிப்பு சம்பவம்: என்.ஐ.ஏ விசாரணைக்கு தமிழ்நாடு காவல் துறை முழு ஒத்துழைப்பு தரும் – டிஜிபி சைலேந்திரபாபு உறுதி..!

கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தலைமையில் கார் வெடிப்பு வழக்கு குறித்தான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், என்.ஐ.ஏ டி.ஜி.பி வந்தனா, எஸ்.பி ஸ்ரீஜித், எஸ் யூ பிரிவு, உளவுத்துறை, நுண்ணறிவு பிரிவு உள்ளிட்ட காவல்துறை பிரிவினர் கலந்துகொண்டனர்.
பின்னர், செய்தியாளர்களை சந்தித்த தமிழக டிஜிபி சைலேந்திரபாபு, கோவையில் நடந்த கார் வெடித்த சம்பவத்தில் மாநகர காவல் துறை ஆணையாளர் உள்ளிட்ட காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டு புலன் விசாரணை செய்து, இறந்தவர் குறித்த விவரங்களை கண்டுபிடித்தனர். மேலும், தற்போது வரை வழக்கில் தொடர்புடைய 6 பேரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நீதிமன்ற காவலில் இருந்தவர்களை இரண்டாவது முறையாக போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தும் வருகின்றனர். இதில், பல முக்கிய ஆதாரங்களை சேகரித்துள்ளனர். குறுகிய காலத்தில் துரிதமாக செயல்பட்ட காவல் துறையினருக்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ளோம்.
கோவை கார் வெடிப்பு வழக்கை, தமிழக முதல்வர் என்.ஐ.ஏ விடம் ஒப்படைக்க பரிந்துரை செய்துள்ளார். இந்நிலையில், உள்துறை செயலகம் வழக்கை என் ஐ ஏ விடம் கொடுக்க உத்தரவிட்டுள்ளது. அதனடிப்படையில், கோவை மாநகர ஆணையாளர் மற்றும் என்ஐஏ அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

அதில் இந்த வழக்கை என்.ஐ.ஏ எடுப்பது குறித்த நடவடிக்கை எடுக்க உள்ளனர். அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளை தமிழ்நாடு காவல் துறை செய்து கொடுக்கும். இந்த வழக்கின் புலன்விசாரணை விவரங்களை முழுமையாக சொல்ல முடியாது. தற்போது வரை கிடைத்துள்ள செல்போன் உள்ளிட்ட முக்கிய ஆதாரங்களை என்.ஐ.ஏ விடம் ஒப்படைக்க உள்ளோம். இந்த வழக்கை பொருத்தவரை, இது வரை கிடைத்த ஆதாரங்கள் அடைப்படையில் இந்த செயலை திட்டமிட்டவர்கள், இதில் ஈடுபட்டவர்களை கைது செய்து பெரும்பாலான ஆதாரங்களை எடுத்துள்ளோம். இதற்கு மேல் என்.ஐ.ஏ மேற்கொள்ளும் விசாரணை அடிப்படையிலான ஆதாரங்களை கொண்டு அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பார்கள், இவ்வாறு டி.ஜி.பி தெரிவித்தார்.

முன்னதாக, கார் வெடிப்பு விசாரணையில் துரிதமாக செயல்பட்ட 19 தனிப்படையை சேர்ந்த போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் ரூபாய் 7000 ஊக்கத்தொகை வழங்கி டிஜிபி சைலேந்திர பாபு கௌரவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.