உலகம் முழுவதும் மார்க்கெட்… அடித்து தூள் கிளப்பும் கன்னியாகுமரி கிராம்பு.!!

இந்தியாவில் 52 வகையான நறுமணப் பொருள்கள் உள்ளதாகச் சொல்லப் படுகிறது. அதில் ஏலக்காய், கிராம்பு, மிளகு, பட்டை, ஜாதிக்காய், மஞ்சள், இஞ்சி ஆகியவை மிகவும் முக்கியமானவை.

உலகம் முழுவதும் கிராம்பு பயிர் செய்யப்பட்டாலும் கன்னியாகுமரி மாவட்டத்தின் மாறாமலை, கரும்பாறை மலைகளில் விளையும் கிராம்புகள் தனி மகத்துவம் வாய்ந்தவை. அதனால்தான் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கன்னியா குமரி கிராம்புக்கு புவிசார் குறியீடு வழங்கப் பட்டுள்ளது.

கரும்பாறை மலைத்தோட்ட விவசாயிகள் சங்கச் செயலாளரும், கிராம்பு விவசாயியுமான லாலாஜியிடம் பேசினோம். ‘1,300 வருஷத்துக்கு முன்னாடி கிராம்புக்காக இந்தோனேசியா போன்ற நாடுகளில் பல படையெடுப்புக்கள் நடந்ததா சொல்வாங்க. ஐரோப்பியாவில இருந்து தமிழ்நாட்டின் ஊட்டி, குற்றாலம் போன்ற இடங்களுக்குத்தான் முதலில் கிராம்பு பயிர் வந்திருக்குது. அங்க இருந்து சுமார் 120 வருஷத்துக்கு முன்னாடி சிம்சன் என்கிறவர் கன்னியாகுமரி மாவட்டத்துக்குக் கிராம்பு பயிரைக் கொண்டுவந்திருக்கிறார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில மாறாமலை, கரும்பாறை பகுதிகளில அதிகமா கிராம்பு பயிர் செய்யப்படுது. அனைத்து வகை நிலங் களிலும் கிராம்பு வளரும். ஆனா, கடல் மட்டத்தில இருந்து ஆயிரம் அடி, இரண்டாயிரத்து ஐந்நூறு அடின்னு உயரம் அதிகரிக்க அதிகரிக்க, கிராம்பு பயிர் ரொம்ப நல்லா வளரும். விளைச்சலும், கிராம்பின் தரமும் சிறப்பா இருக்கும். அதுமட்டுமல்லாம மழை, வெயில், பனி, கடல்காற்று ஆகிய நான்கும் கிராம்பு மரத்துக்கு பருவத்துக்குக் கிடைத்தால் கிராம்பு தரமானதாக இருக்கும். கன்னியாகுமரி மாவட்டத்தில கடல் மட்டத்தில இருந்து இரண்டாயிரம் அடிக்கும் மேல உள்ள மாறாமலை, கரும்பாறை மலைகளில் கிராம்பு பயிரிடுறோம். கடல் பக்கத்தில இருக்கிறதுனால கடல்காற்று கிடைக்கும், மழையும் பனியும், வெயிலும் மாறிமாறி கிடைக்கிறதுனால கன்னியாகுமரி மாவட்ட கிராம்புல யூஜினல் ஆயில் அதிகமாக இருக்கும். அதனாலதான் உலக அளவில கன்னியாகுமரி கிராம்புக்கு தனிமவுசு இருக்கு’ எனக் கன்னியாகுமரி கிராம்பின் தனிச்சிறப்பைக் கூறியவர் உலகளாவிய உற்பத்தி பற்றி விவரித்தார்.

‘உலக அளவில இந்தோனேசியா, தான்சானியாவின் சான்சிபர், மடகாஸ்கர், கேமரூஸ், இலங்கை ஆகிய பகுதி களில் கிராம்பு அதிக அளவு உற்பத்தி ஆகிறது. மத்திய அரசு கணக்குபடி, இந்தியாவில 2,178 ஹெக்டேர் பரப்பளவில கிராம்பு பயிரிடப்படுகிறது. இதுல நம்ம மாநிலத்தில அதிகபட்சமா 1,020 ஹெக்டேர் நிலப்பரப்பில 990 மெட்ரிக் டன் கிராம்பு உற்பத்தி செய்யப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழகத்திலேயே அதிகபட்சமாக 757 ஹெக்டேர் நிலத்தில் கிராம்பு பயிர் விவசாயம் செய்யப் பட்டுள்ளது. அதன் மூலம் ஆண்டுக்கு 668 மெட்ரிக் டன் கிராம்பு உற்பத்தி செய்யப்படுகிறது.

ஏலக்காய் காமர்ஸ் மினிஸ்ட்ரியின் கீழ் வருகிறது; கிராம்பு அக்ரி மினிஸ்ட்ரியின் கீழ் இருக்கு. கிராம்பையும் காமர்ஸ் மினிஸ்ட்ரியின் கீழ் கொண்டு வரணும். ஏலக்காயைப் போல, கிராம்பு பயிரையும் ஸ்பைசஸ் போர்டின்கீழ் கொண்டு வர வேண்டும்ங்கிறது எங்களோட நீண்டகால கோரிக்கை’ என்றவர், கிராம்பு மதிப்புக்கூட்டல் மற்றும் வருவாய் வாய்ப்புகளை விளக்கினார்.

‘கன்னியாகுமரியில கிடைக்கிற தரமான கிராம்பில எண்ணெய் பதம் நிறைய இருக்கிறதுனால உலகத் தரத்தில கொண்டுபோறதுக்காக புவிசார் குறியீடு கொடுத்திருக்கிறாங்க. சான்றிதழ் இன்னும் கையில வரல. இனி அரசாங்க அதிகாரிகளும் விவசாயிகளும் சேர்ந்து குழு அமைக்கப் போறோம். ஃபார்மர் புரொடியூசர் கம்பெனி ஒண்ணு ஆரம்பிச்சு, அதன்மூலமா சர்வதேச சந்தையில கிராம்பு விற்பனை செய்ய இருக்கிறோம். ஜி.ஐ டேக் கிடைச்சதுனால வெளிநாட்டுல நம்ம கிராம்புக்கு நல்ல மதிப்பு இருக்கு. இந்தியா வைப் பொறுத்தவரை, இறக்குமதி அதிகமா செய்துகிட்டிருக்கோம். இதனால அந்நிய செலாவணி நிறைய போய்க்கிட்டுருக்கு. நம்ம உற்பத்தி பெருகப் பெருக அந்நிய செலாவணி அரசுக்குக் குறையும், விவசாயிகளுக்குப் பொருளதார ரீதியில நல்ல முன்னேற்றம் இருக்கும். நிறைய பேருக்கு வேலையும் கொடுக்க முடியும்.

கன்னியாகுமரியில சுமார் ஆயிரம் கிராம்பு விவசாயிகள் இருப்பாங்க. சீஸன் டைம்ல 3,000 முதல் 4,000 தொழிலாளர்கள் வேலை செய்வாங்க. கடல் மட்டத்தில இருந்து 500 முதல் 1,000 அடி உயரத்தில இருக்கக் கூடிய மரங்களில் முதல்லயே கிராம்பு விளைஞ்சிரும். அந்தப் பகுதிகளில ஜனவரி மாசத்தில கிராம்பு பறிக்கலாம். மேல போகப்போக கிராம்பு அறுவடை ஏப்ரல், மே வரைக்கும் நடக்கும். இந்த முறை மடகாஸ்கரில் கிராம்பு விலை கூடிவிட்டது. இந்தோனேசியாவில விளைச்சல் குறைவாக இருக்கிறது. இலங்கை யில பிரச்னை இருக்கிறதுனால அங்க இருந்து கிராம்பு வரல. அதனால கன்னியாகுமரி கிராம்பு இப்போ கிலோ 800 ரூபாய்க்கு விற்பனை ஆகுது.

புவிசார் குறியீடு கிடைச்சது னால வெளிநாட்டில நல்ல மார்க்கெட் கிடைக்க வாய்ப்பு இருக்கு. அரசாங்கமும் நல்ல சப்போர்ட் பண்ணுது. ஆன்லைன் டிரேடிங் பண்ற துக்கும் முயற்சி எடுக்கப்பட்டு வருது. கிராம்பை மதிப்புக் கூட்டுதல் செய்வதற்காக ஊராக் கோணத்தில் தமிழ்நாடு அரசாங் கம் நறுமணப் பொருள்கள் வணிக வளாகம் அமைத்துத் தந்திருக்கிறது.

கிராம்பில இருந்து கிடைக்கக் கூடிய எல்லா பொருள்களையும் மதிப்புக்கூட்டி விற்கலாம். கிராம்பு மொட்டில இருந்தும், கிராம்பு இலையில இருந்தும், கிராம்பு குச்சியில (காம்பு) இருந்தும் ஆயில் எடுப்போம். ஒரு கிலோ இலை 25 ரூபாய் விற்கிறது. கிராம்பு குச்சி 110 ரூபாய் வரைக்கும் விலை போகுது. கிராம்பு கிலோ 800 ரூபாய்க்கு விற்பனை ஆகுது. ஆயிரம் கிலோ இலையில 25 கிலோ ஆயில் கிடைக்கும். ஆயிரம் கிலோ காம்பில இருந்து 40 கிலோ ஆயில் கிடைக்கும். ஆயிரம் கிலோ கிராம்பு மொட்டில இருந்து 150 கிலோ ஆயில் கிடைக்கும். ஆயில் தயாரிக்கும்போது கிடைக்கிற தண்ணியில மவுத் வாஷ் தயாரிச்சு விற்பனை செய்யுறோம். இலையில இருந்து எடுக்கும் ஆயில் மொத்த விற்பனையில் கிலோ 1,500 ரூபாய்க்குப் போகும், குச்சியில இருந்து எடுக்கக்கூடிய ஆயில் மொத்த விற்பனையில 2,000 ரூபாய் வரைக்கும் போகும். கிராம்பில இருந்து நேரடியா எடுக்கக்கூடிய ஆயில் கிலோ 6,000 ரூபாய் வரைக்கும் போகும்.

ஒரு லிட்டர் மவுத் வாஷ் 50 ரூபாய்க்கு விற்பனை ஆகுது. ஆயில் எடுக்காத கிராம்பு பிரவுன் கலர்ல இருக்கும். ஆயில் எடுத்த பிறகு, அது கறுப்பு நிறத்தில ஆகிரும். கிராம்பு இலை, காம்பு, கிராம்பு மொட்டு எல்லாத்திலேயும் இருந்தும் ஆயில் எடுத்த பிறகு, அவற்றை மசாலா தயாரிக்கிறவங் களுக்கு விற்பனை செய்றோம். அதன் மூலமா ஒரு வருமானம் கிடைக்கும். இலை, காம்புல இருந்து எடுக்கக் கூடிய ஆயில் பல்வலிக்கான மருந்து, தசை வலிக்கு போடுற புறத்தேவைக்கான மருந்துகள் தயாரிக்கப் பயன்படுது. கிராம்பு மொட்டுல இருந்து நேரடியா எடுக்கிற ஆயில் நாம் உள்ளுக்கு குடிக்க பயன்படுத்தலாம். கேன்சர், சுகர் போன்றவற்றுக்கு கிராம்பு ஆயில் நல்ல மருந்தாகப் பயன்படுது. கிராம்பு ஆயிலை அழகுசாதன பொருள்கள் தயாரிக்கவும் பயன்படுத்துறாங்க.

நாங்க எடுக்கக் கூடியது சுத்தமான ஆயில். ஆனா, மார்க்கெட்டுல கலப்படம் பண்ணி விற்கிறாங்க. இலையில இருந்து எடுக்கிற ஆயிலைக் கிராம்பு மொட்டுல இருந்து எடுக்கிற ஆயில்னு சொல்லி போலியா, மக்களை ஏமாற்றி விற்பனை செய்றாங்க. புவிசார் குறியீட்டோட மார்க்கெட்டிங் செய்யப்போறதுனால போலி ஆயில் விற்பனை செய்றவங்களுக்கு சிக்கல் ஏற்படும். உலக மார்க்கெட்டைப் பிடிக்க புவிசார் குறியீடு பயனுள்ளதாக இருக்கும். மக்களுக்கும் தரமான பொருள் கிடைக்கும். மொத்தத்தில் குமரி கிராம்புக்கு சர்வதேச சந்தையில் நல்ல விற்பனை கிடைக்கும்.

ஓகி புயலுக்கு முன்னாடி ஆண்டுக்கு 1,000 டன் கிராம் உற்பத்தி ஆகும். புயல்ல மரங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டதால குறைஞ்சிடுச்சு. அது சரியாகி வர இன்னும் கொஞ்சம்நாள் பிடிக்கும். ஓகிக்கு முன்ன 100 கோடி ரூபாய்க்கு பிசினஸ் நடக்கும். இப்போது 600 டன்தான் உற்பத்தி ஆகுது. 56 கோடி ரூபாய்க்கு இந்த வருஷம் பிசினஸ் நடக்கும்னு எதிர்பார்க்கிறோம்’ என்றார்.