24 மணி நேரமும் செயல்படும் நவீன சைபர் கிரைம் பிரிவு… ஆயிரக்கணக்கில் குவியும் புகார்கள்.!!

மிழக காவல்துறையின் சைபர் கிரைம் குழுவை நவீனமாக்கும் முயற்சியில் தமிழக அரசு இறங்கியிருக்கிறது. நவீன தொழில்நுட்ப சாதனைங்கள் சைபர் கிரைம் குழுவுக்காக பிரத்யேகமாக வரவழைக்கப்பட இருக்கின்றன.

நவீன தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப குற்றங்களும் அதிகரித்து வருகின்றன. இணைய வழி குற்றங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தமிழகமெங்கும் சைபர் கிரைட் காவல்துறை நிலையங்களை உருவாக்குவது என்பதும் அவற்றை நவீன தொழில்நுட்ப வசதிகளோடு ஒருங்கிணைப்பதும் முக்கியமானதாகிறது.

கடந்த 15 மாதங்களில் மட்டும் தமிழகம் முழுவதிலிருந்தும் 80 ஆயிரம் புகார்கள் பெறப்பட்டிருக்கின்றன. இவற்றில் பெரும்பாலான புகார்கள், இணைய வழியில் பணத்தை இழந்தது தொடர்பாகவே பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் 400 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக சைபர் கிரைம் பிரிவு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இணைய வழி குற்றங்களை தடுப்பதற்காக தமிழகமெங்கும் ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தபட்சம் ஒரு சைபர் கிரைம் குழுவை உருவாக்கும் முயற்சியில் தமிழக அரசு இறங்கியிருக்கிறது. தமிழகம் முழுவதும் 46 இடங்களில் சைபர் கிரைம் அலுவலங்கள் அமைக்கப்படுகின்றன. இதற்காக தமிழக அரசு 28 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறது

உயர் தொழில்நுட்பத்துடன் கூடிய பாரன்சிக் வொர்க் ஸ்டேஷன், பாரன்சிக் டிஸ்க் இமேஜிங் டிவைஸ், ரைட் பிளாக்கர், டிஸ்க் பாரன்சிக் சாப்ட்வேர் உள்ளிட்டவற்றோடு ஏறக்குறைய 16 சாப்ட்வேர் ஒவ்வொரு சைபர் கிரைம் நிலையத்திலும் இருக்கும்படி திட்டமிடப்பட்டுள்ளது. தகவல்கள் அழிக்கப்பட்டாலும் அவற்றை திரும்பப் பெற்று ஆய்வு செய்வதற்கு ஏற்றது போல் டேட்டா எஸ்ட்ரக்ஷன் சாப்ட்வேர் உள்ளிட்டவையும் சைபர் கிரைம் குழுவிற்காக பெறப்படுகின்றன.

ஐ.பி முகவரிகளை டிரேஸ் செய்வது, சோஷியல் மீடியாவில் பகிரப்படும் பல்வேறு செய்திகளின் மூலத்தை கண்டறிவது உள்ளிட்டவற்றை விரைவாகவும், சரியாகவும் கண்டுபிடிப்பதன் மூலமாக வாட்ஸ்அப் மூலமாக பல்வேறு வதந்திகள் பரப்புவது தடுக்கப்படும்.

தமிழ்நாடு காவல்துறையில் சைபர் கிரைம் பிரிவு ஆரம்பித்து 20 ஆண்டுகளாகப் போகிறது. பெரும்பாலான புகார்களுக்கு தனியார் நிறுவனங்களின் உதவியை நாட வேண்டிய சூழல் இருந்து வருகிறது. குற்ற சம்பவம் நடந்த இடத்தில் இருந்து கைப்பற்றப்படும் பொருட்களில் உள்ள டேட்டாவை மீட்டெடுக்கவும் தனியார் நிறுவனங்களை சார்ந்திருக்க வேண்டியிருக்கிறது.

சைபர் கிரைம் பிரிவில் இதற்கான தொழில்நுட்பமோ, அது தெரிந்த ஆட்களோ இல்லாத நிலையில்தான் ரகசியமாக வைத்துக் கொள்ள வேண்டிய விஷயங்களை கூட தனியார் நிறுவனங்களிடம் பகிர்ந்து, அவர்களின் உதவியை பெற வேண்டியிருக்கிறது.

குற்ற சம்பவங்கள் எங்கே நடந்தாலும், அங்கே ஏதாவது ஒரு மொபைல் கண்டெடுக்கப்படுகிறது. அதில் பதிவாகியுள்ள விபரங்களை முதலில் மீட்டெடுப்பதுதுன் சைபர் கிரைம் பிரிவின் முதல் பணியாக இருந்து வருகிறது. சம்பந்தப்பட்ட குற்ற சம்பவத்தில் தொடர்புடையவர்களையும், அதில் பாதிக்கப்பட்டவர்களையும் நேரடியாக சம்பந்தப்படுத்த தேவையான தவல்களை மொபைல் தந்துவிடுகிறது.

பொதுமக்கள் எந்தவித தயக்கமும் இல்லாமல் சைபர் கிரைம் பிரிவை தேடி வருவார்களா? ஆம். அதற்காக 24 மணி நேரமும் செயல்படும் உதவி மையமும் ஆரம்பிக்கப்பட இருப்பதாக காவல்துறை தெரிவிக்கிறது.