‘ஆப்ரேஷன் கங்கா’.. மீட்பு நடவடிக்கை… உக்ரைனைலிருந்து தொடர்ந்து நாடு திரும்பும் இந்தியர்கள்- வெளியான தகவல்.!!

ஆப்ரேஷன் கங்கா’ என்ற புதிய மீட்புப்பணி மூலம் உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை பத்திரமாக தாயகம் அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உக்ரைனில் சிக்கி தவிக்கும் இந்திய மாணவர்களை அண்டை நாடுகளுக்கு அழைத்து வந்து, அங்கிருந்து விமானத்தின் மூலம் மீட்கும் பணியை மத்திய அரசு செய்து வருகிறது. இந்நிலையில் மத்திய மந்திரிகள் இந்த பணிகளை முடுக்கி விடுவதற்காக அண்டை நாடுகளுக்கு விரைந்துள்ளனர். இந்த மீட்பு பணிக்கு ‘ஆபரேஷன் கங்கா’ என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. அந்த வகையில் இப்போது ருமேனியாவில் இந்திய மாணவர்களுடன், மத்திய விமான போக்குவரத்து துறை மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா உள்ளார்.

இந்நிலையில் அவர் ருமேனியாவில் இருந்து டுவிட்டரில், அங்குள்ள நிலவரத்தை குறித்தும் மற்றும் ஆபரேஷன் கங்கா பணியின் மூலம் எடுத்த நடவடிக்கைகள் குறித்தும் முக்கிய தகவல்களை பதிவிட்டுள்ளார். அதில் கூறியுள்ளதாவது, உக்ரைனில் இருந்து அண்டை நாடுகளான ருமேனியா, மால்டோவா போன்ற நாடுகளில் கடந்த 7 நாட்களில் தஞ்சமடைந்த 6222 இந்தியர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர்.

இதனை அடுத்து இந்தியர்களை பத்திரமாக தாயகம் அழைத்து வருவதற்காக உக்ரைன் எல்லையில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சக்கீவா விமான நிலையம் இவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சக்கீவா விமான நிலையத்தின் மூலம் இந்தியர்களை எளிதாகவும், விரைந்தும் விமானம் மூலம் மீட்க முடிகிறது.

மேலும் அடுத்த 2 நாட்களில் 1050 இந்திய மாணவர்கள் தாயகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து இந்தியாவில் இருந்து இந்தியர்களை தாயகம் அழைத்து வரும் பணியில் கடந்த 7 நாட்களில் மட்டும் 29 விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்துள்ளார்.