யோகா மாஸ்டர் உட்பட 2 பேருக்கு கத்திக்குத்து- இருவர் கைது-ஒருவர் தப்பி ஓட்டம் ..!

பொள்ளாச்சி கோட்டூர் ரோட்டை சேர்ந்தவர் சரவணன் (வயது 40 )யோகா மாஸ்டராக உள்ளார். இவரது நண்பர் பொள்ளாச்சி மணியர் காலனி சேர்ந்த சூர்யா (வயது 27) இவர்கள் இருவரும் நேற்று பொள்ளாச்சி நேதாஜி ரோட்டில் உள்ள புளிக்கடைக்கார வீதியில் நின்று பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த குமரன் நகரை சேர்ந்த ஷேக் அப்துல்லா (வயது 25) நல்லப்பா நகரை சேர்ந்த வேல்முருகன் என்ற மெண்டல் முருகன் ( வயது 34 )குமரன் நகரை சேர்ந்த சுருட்டை ஹரி என்ற ஹரி பிரசாத் (வயது 27 ) ஆகிய 3 பேரும் சேர்ந்து சரவணன் சூர்யா ஆகியோரை கத்தியால் குத்தினார்கள். இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர்.கடந்த சில நாட்களுக்கு முன்பு சரவணன் நண்பர் விருமாண்டி என்பவருடைய சேவல் காணாமல் போனது.இந்த சேவல் திருட்டு போவதற்கு ஷேக் அப்துல்லா வேல்முருகன் ஆகியோர்தான் காரணம் என்று சரவணன் கூறினாராம். இதனால் ஆத்திரமடைந்த ஷேக் அப்துல்லா வேல்முருகன் உட்பட 3 பேர் சேர்ந்து அவர்களை கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது.படுகாயம் அடைந்த 2 பேரும் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.இது குறித்து பொள்ளாச்சி மேற்கு பகுதி போலீசில் சரவணன் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஆனந்த நாயகி வழக்கு பதிவு செய்து ஷேக் அப்துல்லா, வேல்முருகன் ஆகியோரை நேற்று மாலை கைது செய்தார். சுருட்டை ஹரி தலைமறைவாகிவிட்டார். அவரை தேடி வருகிறார்கள்.