தலையில் கல்லை போட்டு தொழிலாளியை கொலை செய்த வழக்கில் 2 பேர் கைது – 3 பேருக்கும் வலை..!

கோவை அருகே உள்ள மலுமிச்சம்பட்டி, அன்புநகரைச் சேர்ந்தவர் பிரபாகரன் என்ற நாகேஷ்( வயது 39 ) கூலி தொழிலாளி.இவருக்கு திருமணம் ஆகி மனைவியும், 2 மகள்களும் உள்ளனர் .இவர் தனது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த தமிழ்ச்செல்வன், ஞானபிரகாஷ், ஆகியோருடன் அங்குள்ள ஒரு டாஸ்மாக் கடைக்கு மது குடிக்க சென்றார் .3 பேரும் அங்குள்ள பாரில் அமர்ந்து மது குடித்துக் கொண்டிருந்தனர். அப்போது பாருக்கு வெளியே மதுவாங்க நின்று கொண்டிருந்த 5 பேர் கொண்ட கும்பலுக்கும் இவர்களுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது . பின்னர் அங்கிருந்தவர்கள் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினர். இதையடுத்து பிரபாகரன் அங்கிருந்து தனது நண்பர்களுடன் ஸ்கூட்டரில் சென்று விட்டார். இந்த நிலையில் தகராறு செய்த அந்த 5 பேர் கொண்ட கும்பல் ஒரு காரில் அவர்களுக்கு பின்னால் வந்து கொண்டிருந்தனர். இதனால் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தவர்கள் காரில் வந்தவர்களுக்கு வழி விடவில்லை என்று கூறப்படுகிறது . காரில் வந்த நபர்கள் அந்த ஸ்கூட்டரை முந்தி சென்று வழிமறித்தனர். பின்னர் அவர்கள் ஸ்கூட்டரில் வந்த ஞானப்பிரகாஷ், தமிழ்ச்செல்வன், பிரபாகரன் ஆகியோருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் அவர்கள் 3பேரையும் தாக்கினர். அவர்களின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் ஞானப்பிரகாஷ், தமிழ்ச்செல்வன் ஆகியோர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். பின்னர் அந்த கும்பல் ஆத்திரத்தில் பிரபாகரனை கீழே தள்ளி தென்னை மட்டையால் தாக்கியதுடன், அங்கே கிடந்த கல்லை எடுத்து அவரது தலையில் போட்டனர். இதில் அவர் பலத்த காயமடைந்தார். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது . ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய பிரபாகரனை அவரது நண்பர்கள் மீட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர் . அவர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர அளிக்கப்பட்டது. சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் இறந்தார். இது குறித்து செட்டிபாளையம் போலீசார் கொலைவழக்கு பதிவு செய்து விசாரண நடத்தினார்கள். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். இந்த நிலையில் காரில் வந்த 5 பேர் கொண்ட கும்பலில் ஒருவர் ஆன்லைன் பணப்பரிமாற்றம் மூலம் மது வாங்கியது தெரியவந்தது. இதையடுத்து அந்த நபரின் செல்போன் எண் விபரத்தை வைத்து ராமநாதபுரத்தைச் சேர்ந்த மணிகண்டன். சந்திரசேகர் ஆகிய 2 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். இவர்களிடம் நடத்திய  விசாரணையில் இவர்கள் 2 பேர் உட்பட ராமநாதபுரம், மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த 3பேர் செட்டிபாளையம் பகுதியில் தங்கி இருந்து கட்டிடங்களுக்கு கான்ங்கிரீட் போடும் வேலை செய்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து தலை மறைவாக உள்ள மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்..