கோவை மாநகராட்சியில் 2 நாள் சிறப்பு வரி வசூல் முகாம்..!

கோவை மாநகரில் சிறப்பு வரி வசூல் முகாம்கள் நாளை மற்றும் 29-ந் தேதி நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, மாநகராட்சி ஆணையா் பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- 2022- 2023-ம் நடப்பு நிதியாண்டின் இரண்டாம் அரையாண்டு வரையான காலத்தில் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, காலியிட வரி, தொழில் வரி மற்றும் குடிநீா்க் கட்டணம் முதலிய அனைத்து நிலுவைகளையும் செலுத்த ஏதுவாக, மக்களின் வசதிக்காக (நாளை) ஜனவரி 28 மற்றும் 29 ஆகிய இரு நாட்களில் கீழ்க்கண்ட இடங்களில் சிறப்பு வரி வசூல் முகாம்கள் நடத்தப்பட உள்ளன.
சிறப்பு வரிவசூல் முகாம்கள் நடைபெறும் இடங்கள்: கிழக்கு மண்டலத்தில் 56, 57-வது வார்டுக்கு உள்பட்ட ஒண்டிப்புதூர், 7-வது வார்டில் நேரு நகர் மாநகராட்சிப் பள்ளி, மேற்கு மண்டலம் 34-வது வார்டில் கவுண்டம்பாளையம், மஞ்சீஸ்வரி காலனி, கற்பக விநாயகர் கோயில் வளாகம், 38-வது வார்டில் வடவள்ளி பாலாஜி நகர், புவனேஸ்வரி கோயில் வளாகம், 40-வது வார்டில் வி.என்.ஆர். நகர், தெற்கு மண்டலம் 98-வது வார்டில் சாய் நகர், காந்திநகர் மற்றும் 97-வது வார்டில் பிள்ளையார்புரம் ஹவுசிங் யூனிட் , வடக்கு மண்டலம் 11-வது வார்டில் ஜனதா நகர் மாநகராட்சிப் பள்ளி, 15-வது வார்டில் சுப்ரமணியம்பாளையம் மாநகராட்சி வணிக வளாகம், மத்திய மண்டலம் 32-வது வாா்டில் ரத்தினபுரி சிறுவர் பூங்கா, 63-வது வார்டில் ஒலம்பஸ் 80அடி சாலையில் உள்ள மாநகராட்சி வணிக வளாகம், 84-வது வார்டில், ஜி.எம். நகரில் உள்ள தா்க்கத் இஸ்லாம் பள்ளி.
ஜனவரி 29 (ஞாயிற்றுக்கிழமை) 73-வது வார்டு, பொன்னையராஜபுரம் வார்டு அலுவலகம், 40-வது வார்டில் பெரியதோட்டம் பகுதியிலும் நடைபெற உள்ளது. மேலும், மாா்ச் 31 வரை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து வரிவசூல் மையங்களும் வழக்கம் போல காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை செயல்படும். மக்கள் இந்த வசதியைப் பயன்படுத்தி மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியினங்களை செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.