ரத்த வெள்ளத்தில் மருத்துவர் பாலாஜி சரிந்து விழுந்துள்ளார். இதனால், மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனை பணியாளர்கள், மருத்துவர் மீது தாக்குதல் நடத்திய விக்னேஷ் என்ற நபரை மடக்கிப் பிடித்தனர். மேலும், ரத்த வெள்ளத்தில் சரிந்த மருத்துவர் பாலாஜியை உடனடியாக அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனர். அவருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டு அவர், தற்போது அபாய கட்டத்தில் இருந்து மீண்டுள்ளார்.
மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திய விக்னேஷ்வரன் மீது கிண்டி போலீசார் 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். அரசு ஊழியர் மீது தாக்குதல், கொலை முயற்சி, கொடுங்காயம் ஏற்படுத்துதல், ஆபாசமாகப் பேசுதல், தமிழ்நாடு மருத்துவர்கள் பாதுகாப்புச் சட்டப்பிரிவு என 127 (2),132, 307, 506 (2) உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து சைதாப்பேட்டை பெருநகர 9வது குற்றவியல் நீதிமன்றத்தில் விக்னேஷ்வரன் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுப்ரமணியம், விக்னேஷ்வரனை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார். அதன்படி வரும் 27 ஆம் தேதி வரை விக்னேஷ் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.