தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள், உறவினர்களை அடையாளம் காண புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் புற்றுநோய் மருத்துவர் பாலாஜி மீது புதன்கிழமை கத்திக்குத்து சம்பவம் நடந்த நிலையில், அரசு மருத்துவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்திருந்தனர்.
இதனிடையே, நேற்று அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தையில் மருத்துவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, இன்று ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:
“மருத்துவர் பாலாஜி நலமான இருக்கிறார். இன்று பிற்பகலுக்கு மேல் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து தனி அறைக்கு மாற்றப்படவுள்ளார். அவரை தாக்குய விக்னேஷ் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அரசு மருத்துவமனைகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. காவல்துறையினரும் சுகாதாரத் துறையினரும் இணைந்து கூட்டு தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அரசு மருத்துவமனைகளில் பணிபுரிவோர் ‘காவல் உதவி’ செயலியை பதவிறக்கம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தற்போது, சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் நோயாளிகள் மற்றும் உறவினர்களை அடையாளும் காண்பதற்காக கைகளில் அடையாள அட்டை(டேக்) கட்டும் பணி சோதனை முறையில் நடைமுறையில் உள்ளது. விரைவில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இது நடைமுறைக்கு கொண்டுவரப்படவுள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று மாலை மருத்துவ சங்கங்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு மருத்துவ சங்கத்தினர் திருப்தி தெரிவித்தனர்.
தமிழகத்தில் ஒருநாள் அடையாள போராட்டத்தை மருத்துவர்கள் முன்னெடுத்துள்ளார்கள். ஆனால், மருத்துவச் சேவைகளில் எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் உள்நோயாளிகள், அவசர பிரிவுக்கு வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து மருத்துவர்கள் ஒத்துழைப்பு அளித்து வருகிறார்கள்” எனத் தெரிவித்தார்.
இதனிடையே, தான் நலமுடன் இருப்பதாகவும், இதய நோய் மருத்துவர்கள் தொற்று ஏற்படாமல் இருக்க சிகிச்சை அளித்து வருவதாகவும் மருத்துவர் பாலாஜி பேசிய விடியோவும் வெளியிடப்பட்டுள்ளது.