காதலை ஏற்க மறுத்த11ம் வகுப்பு மாணவிக்கு 10 இடங்களில் சரமாரி கத்தி குத்து-இளைஞர் வெறிச்செயல்.!!

திருச்சி மணப்பாறையை அடுத்த அத்திக்குளத்தில் காதலிக்க மறுத்ததால் 11ம் வகுப்பு மாணவிக்கு 10 இடங்களில் சரமாரியாக கத்தி குத்து விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அத்திகுளம் பகுதியை சேர்ந்தவர் 16 வயது மாணவி. இவர், திண்டுக்கல் ரோட்டில் உள்ள அரசு உதவிபெறும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று கடைசி தேர்வு முடிந்து வீட்டிற்கு நடந்து சென்றார். அப்போது திருச்சி ரயில்ரோடு மேம்பாலம் பகுதியில் நின்றிருந்த வாலிபர் திடீரென மாணவியை வழிமறித்துள்ளார்.

அப்போது, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கழுத்து உட்பட 10 இடங்களில் சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடினார். இதில் ரத்த வெள்ளத்தில் மாணவி மயங்கி விழுந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மாணவியை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதல் கட்ட விசாரணையில் கத்தியால் குத்தி விட்டு தப்பிய பொத்தமேட்டுப்பட்டியை சேர்ந்த கேசவன் (22) என்பது தெரியவந்துள்ளது. தலைமறைவாக உள்ள அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.