போலி ஆவணம் தயாரித்து ரூ.97 லட்சம் சுருட்டல் … வேலூர் கூட்டுறவு வங்கி பெண் அதிகாரி கைது.!!

வேலூர் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் குடியாத்தம் கிளை மேலாளராக உமா மகேஸ்வரி என்ற பெண் 2018-2019=ம் ஆண்டில் பணிபுரிந்து வந்தார்.

அப்போது, மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் வழங்கியதாக போலி ஆவணங்களைத் தயாரித்து ரூ.97,37,000 பணத்தை மோசடி செய்து அவர் சுருட்டியிருக்கிறார். இது குறித்து, துறை உயரதிகாரிகளுக்கு புகார் சென்றது. அதையடுத்து, குடியாத்தம் வங்கியில் தணிக்கை செய்யப்பட்டபோது, பணமோசடி நடந்திருப்பது உறுதியானது. இதைத்தொடர்ந்து, கூட்டுறவு சங்க துணைப் பதிவாளர் அருட்பெருஞ்ஜோதி, வேலூர் மாவட்ட வணிக குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸில் புகார் செய்தார்.

இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி வழக்குப் பதிவு செய்து, உமா மகேஸ்வரியை கைது செய்தார். விசாரணைக்குப் பின்னர் வேலூர் ஜே.எம்-2 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் வேலூர் பெண்கள் தனிச்சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். உமா மகேஸ்வரி தற்போது வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாளராக பணியாற்றி வந்ததும் குறிப்பிடத்தக்கது. அதேசமயம், ரூ.97 லட்சம் பணமோசடியில் உமா மகேஸ்வரியைத் தொடர்ந்து மேலும் பலர் சிக்கக்கூடும் என வணிக குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸார் தெரிவித்திருக்கிறார்கள்.