புதிய தலைமை வழக்கறிஞராக பட்டாபி சுந்தர் ராமன் எனப்படும் பி எஸ் ராமன் இன்று பதவி ஏற்கிறார்…

தமிழ்நாடு தலைமை வழக்கறிஞராக இருந்த ஆர். சண்முகசுந்தரம் நேற்று ராஜினாமா செய்த நிலையில், தமிழ்நாட்டின் புதிய தலைமை வழக்கறிஞராக பட்டாபி சுந்தர் ராமன் எனப்படும் பி எஸ் ராமன் இன்று பதவி ஏற்கிறார். இதற்கு ஆளுநர் நேற்று இரவு ஒப்புதல் அளித்த நிலையில் இன்று காலை ஆளுநர் மாளிகையில் அதற்கான ஆவணங்களில் கையெழுத்திடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அவரது அறையில் பதவி ஏற்கிறார்.

யார்இந்தபி.எஸ்ராமன்?

பட்டாபி சுந்தர் ராமன் எனப்படும் பி எஸ் ராமன் சென்னை சட்டக் கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்து, 1985-ம் ஆண்டு வழக்கறிஞராக பதிவு வகித்தார். சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றிய இவர் 2004 ஆம் ஆண்டு மூத்த வழக்கறிஞராக சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்தது. மூத்த வழக்கறிஞர் மற்றும் தமிழ்நாட்டின் முன்னாள் அட்வகேட்-ஜெனரல் அதாவது தலைமை வழக்கறிஞர் பி.எஸ் ராமன் முன்னாள் அட்வகேட் ஜெனரலும் திமுக அரசியல்வாதியுமான வி.பி.ராமனின் இளைய மகன் ஆவார். இவரது மூத்த சகோதரர் பிரபல மேடை மற்றும் தொலைக்காட்சி நடிகர் மோகன் வி. ராம் ஆவார். ராமன் சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் இந்திய உச்ச நீதிமன்றத்தில் பயிற்சி செய்துவந்தார். 11 ஜூன் 2006 அன்று, ஆர். முத்துக்குமாரசாமிக்குப் பதிலாக ராமன் கூடுதல் அட்வகேட்-ஜெனரலாக நியமிக்கப்பட்டார். 29 ஜூலை 2009 அன்று தமிழ்நாடு வழக்கறிஞர் ஜி. மாசிலாமணி ராஜினாமா செய்தபோது ராமன் அட்வகேட் ஜெனரலாக அப்போதைய முதல்வர் கருணாநிதி நியமனம் செய்தார். இவர் தமிழ்நாடு தொடர்பான பல்வேறு முக்கிய வழக்குகளில் ஆஜராகி வாதிட்டுள்ளார். அதன்பின் தற்போது மீண்டும் திமுக ஆட்சியில் அட்வகேட் ஜெனரலாக பதவி ஏற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

திமுக ஆட்சி அமைந்ததும், தலைமை செயலாளர் முதல் பல்வேறு அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டனர். அப்போது, ஆர். சணுமுகசுந்தரம் தலைமை வழக்கறிஞராக நியமனம் செய்யப்பட்டார். இவர், 1995 ஆம் ஆண்டு ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்கில் தீவிரமாக இருந்தார். டான்சி நிலத்தை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாங்கிது தொடர்பான வழக்கில் ஆவணத்தை தயார் செய்து கொண்டிருந்த போது ரவுடி கும்பலால் கடுமையாக தாக்கப்பட்டார். 1989 முதல் 1991 வரையிலான திமுக ஆட்சி காலத்தில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞராகவும், 1996 முதல் 2001 ஆம் ஆண்டு வரை மாநில தலைமை அரசு குற்றவியல் வழக்கறிஞராகவும் பதவிவகித்தவர் இவர். மேலும், 2000ஆம் ஆண்டில் மூத்த வழக்கறிஞராக சென்னை உயர் நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டார். அதன் பின், 2002 முதல் 2008 வரை மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். 2015 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை மெட்ராஸ் பார் அசோசியேசன் தலைவராக இருந்தவர் சண்முகசுந்தரம். கடந்த 2022 ஆம் ஆண்டு ராஜினாமா முடிவை தமிழக முதல்வரிடம் கொடுத்தபோது, தற்போதய சூழலில் ராஜினாமா செய்ய வேண்டாம் என்று முதல்வர் கேட்டுக்கொண்டதால், தலைமை வழக்கறிஞராக பணியாற்றிவந்தார். ஆனால் தற்போது மீண்டும் தனது பதவியை ராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ளார்.