தொடர் மழை: திரிச்சூர் மாவட்டம் சாலக்குடி ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்: கரையோர மக்கள் 2,700 பேர் முகாம்களில் தங்க வைப்பு..!

திருவனந்தபுரம்: கேரளாவில் திரிச்சூர் மாவட்டம் சாலக்குடி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் கரையோரத்தில் உள்ள 2,700 பேர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

அம்மாநிலத்தில் இன்றும் மழை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் பெய்து வரும் தென்மேற்கு பருவமழை காரணமாக அங்குள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நேற்று திரிச்சூர் மாவட்டத்தில் பல அணைகள் அதன் முழு கொள்ளளவை எட்டிய காரணத்தால் பாதுகாப்பு கருதி சாலக்குடி ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

இதனால் சாலக்குடி ஆற்றின் கரையோர மக்கள் 2,700 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். தொடர்ந்து சாலக்குடி ஆற்றில் அதிகபட்சமாக 7.27மீ வரை ஆற்றில் தண்ணீர் உயர்ந்தது. தற்போது ஆற்றில் செல்லக்கூடிய தண்ணீர் முழுவதும் கடலுக்கு செல்லும் காரணத்தினாலும், ஆற்றில் மீன்பிடி பகுதிகளில் மழை குறைந்ததாலும் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டிருப்பதாக அம்மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்கள் முகாம்களிலேயே இருக்க வேண்டும் என்றும் அடுத்த அறிவிப்பு வரும் வரை பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடரும் என்றும் திரிச்சூர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

இன்றும் கேரளாவில் மழை இருக்கும் என்ற காரணத்தினால் கோட்டயம், எர்ணாகுளம், திரிச்சூர், பாலக்காடு மற்றும் மலப்புரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து எடுக்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக பல்வேறு பிரச்சனைகள் இதுவரை தவிர்க்கப்பட்டுள்ளது.