சென்னையில் 2வது விமான நிலையம்: அமைவது எங்கே..? லிஸ்ட் ரெடி..!

சென்னையில் இரண்டாவதாக விமான நிலையம் அமைப்பதற்கான ஏற்பாடுகள் ஆரம்பமாகி இருக்கிறது. இந்திய விமான நிலைய ஆணையம் கிரீன்ஃபீல்டு வசதியை அமைப்பதற்காக, தமிழநாடு அரசு சிறப்பான நான்கு இடங்களை தேர்வு செய்து இருக்கிறது.

தற்போதுள்ள மீனம்பாக்கம் விமான நிலைய வசதிகள் போலவே செய்து தரப்படும் என்று அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னையில் இரண்டாவதாக விமான நிலையத்தை அமைக்க திருப்போரூர், பாரந்தூர், பண்ணூர், படலம் போன்ற நான்கு இடங்களை தேர்வு செய்து இதில் ஏதேனும் ஒன்றில் விமான நிலையத்தை அமைக்கப்போவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

எவ்வளவு தான் அதிகளவில் விமானங்களும், பயணிகளின் எண்ணிக்கையும் தினமும் அதிகரித்தாலும் பெங்களூரு மற்றும் ஹைதராபாத் விமான நிலையங்களை போன்று இவை சிறப்பானதாக அமையவில்லை. அதனால் விமான நிலையத்தில் உள்ள டெர்மினல் கட்டிடங்களை பல்வேறு புதுமைகளுடன் ஏஏஐ வடிவமைத்து வருகிறது. மேலும் நீண்ட நாட்களாகவே சென்னையில் இரண்டாவதாக விமான நிலையம் அமைக்கும் திட்டம் நிலுவையில் இருந்து வருகிறது. கடந்த 2006-ல் தொழித்துறை மையமாக திகழும் ஸ்ரீ பெரும்புதூரில் கிரீன்ஃபீல்டு விமான நிலையம் அமைக்கும் பணியை தொடங்க அப்போதைய திமுக அரசு திட்டமிட்டது.

ஆனால் பாமக கட்சியின் தொடர் எதிர்ப்பால் இந்த திட்டம் கைவிடப்பட்டது, அதனை தொடர்ந்து அதிமுக அரசு 2011 முதல் 2021 வரை போராடியும் இந்த திட்டத்தை செயல்படுத்த முடியவில்லை. மேலும் தற்போது அமைக்கப்போகும் இரண்டாவது விமான நிலையம் குறித்து அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், சென்னையில் இரண்டாவது விமான நிலையம் அமைக்கும் பணியை நாங்கள் தொடங்கியுள்ளோம். தமிழ்நாடு தொழித்துறை கழகம் (டிட்கோ) இதற்காக நான்கு இடங்களை பரிந்துரைத்தது, ஏஏஐ அந்த நான்கு இடங்களையும் ஆராய்ந்து வருகிறது, ஆய்விற்கு பின் எந்த இடத்தில் விமான நிலையம் அமைக்கலாம் என்பது முடிவு செய்யப்படும் என்று கூறினார்.

சென்னையிலிருந்து 44 கி.மீ தொலைவில் திருப்போரூர் அமைந்துள்ளது, படலம் 78 கி.மீ தொலைவிலும், பண்ணூர் 54 கி.மீ தொலைவிலும், பரந்தூர் 69 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. இந்த தூரங்கள் குறித்து அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், தற்போதைய காலத்தில் இந்த தூரம் அவ்வளவு பெரிய பிரச்சனை இல்லை, நகரத்திற்குள் விமான நிலையத்தை அமைப்பது மக்களுக்கு இடையூறை ஏற்படுத்தும். இந்த இடங்களுக்கு கிட்டத்தட்ட 2 மணி நேர பயணத்தில் சென்றுவிடலாம் என்று கூறியுள்ளார். மேலும் புதிய விமான நிலையம் வந்தவுடன் பழைய விமான நிலையத்தை மூடும் எண்ணம் அரசுக்கு இல்லை என்றும் கூறப்படுகிறது. டெல்லியை போல பல டெர்மினல் கட்டிடங்களை கொண்டு சென்னை விமான நிலையமும் அமையும், பழைய விமான நிலையத்திற்கு கூடுதல் வசதிகள் செய்து மேம்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது சென்னையை தவிர திருச்சி, மதுரை, கோவை, தூத்துக்குடி மற்றும் சேலம் ஆகிய ஐந்து இடங்களில் விமான நிலையம் செயல்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.