மலேசியா வியாபாரியிடம் ரூ.6.50 கோடி மோசடி செய்தவர் கைது…

சென்னை அம்பத்தூர் அடுத்த ஐ.சி.எப்.காலணி நர்மதா தெருவைச் சேர்ந்தவர் டத்தோ ராம சரேபே ( வயது 58) இவர் மலேசியாவில் நிரந்தரமாக குடியேறியுள்ளார்.இவர் அங்கு துணி வியாபாரம் செய்து வருகிறார்.இவரது பூர்வீகம் காஞ்சிபுரம் ஆகும். இந்த நிலையில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த மேனகா என்பவர் மலேசியாவிற்கு சுற்றுலா சென்றார்.அங்கு துணி வியாபாரி டத்தோ ராம சரேபேவை சந்தித்தார்.அப்போது இருவரும் காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் நட்பாக பழகினார்கள்.

அப்போது மேனகா மலேசியா வியாபாரியிடம் எனது உறவினர் சக்திவேல் என்கிற ஸ்ரீகாந்த் தமிழ் நாட்டில் மிக பெரிய தொழில் அதிபராக உள்ளார்.அவரிடம் பணம் முதலீடு செய்தால், முதலீடு செய்யும் பணத்தின் அளவிற்கு லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதை நம்பிய மலேசியா வியாபாரி சென்னைக்கு மேனகாவுடன் வந்தார்.சென்னையில் சக்திவேல் என்கிற ஸ்ரீகாந்த்தை சந்தித்து சோதனை முறையில் ரூ 10 லட்சம் பணம் கொடுத்தார். அதற்கு குறிப்பிட்ட காலத்தில் ரூ 10 லட்சம் லாபத்தை கொடுத்தார். இதனை நம்பிய மலேசியா வியாபாரி பல தவணைகளில் ரூ.6.கோடியே 50 லட்சம் பணத்தை ஸ்ரீகாந்த் வங்கி கணக்கில் செலுத்தினார்.ஆனால் இதற்கு லாபத்தையும், அசல் தொகையும் ஸ்ரீகாந்த் மலேசியா வியாபாரிக்கு கொடுக்கவில்லை.

இதனால் தான் ஏமாற்றபட்டேன் என்பதை உணர்ந்த மலேசியா வியாபாரி டத்தோ ராம சரேபே ஆவடி காவல் ஆணையர் கி.சங்கரிடம் புகார் கொடுத்தார்.இப்புகாரை விசாரிக்க ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார்.அவரது உத்திரவின் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி ரூ.6.50 கோடி மோசடி செய்த காஞ்சிபுரம், பாண்டவர் கோவில் மேற்கு மாட் வீதியைச் சேர்ந்த சக்திவேல் என்கிற ஸ்ரீகாந்த்தை (வயது 45) கைது செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட அவரை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.