கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: தமிழகம் ,கர்நாடகத்தில் முகக்கவசம் அணிய அறிவுறுத்தல்…

திருவனந்தபுரம்: கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் கிடுகிடுவென அதிகரித்து வருகிறது. கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 292 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. மேலும் கொரோனா வைரஸ் பாதிப்பால் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.இது தொடர்பாக, தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், இணை நோய் உள்ள முதியவர்கள், கர்ப்பிணிகள், நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்துள்ளவர்கள், பொது இடங்களில் முகக்கவசம் அணிவதை மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் ஊக்குவிக்க வேண்டும் என்றும் சமூக இடைவெளி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார். ஃப்ளூ காய்ச்சல், கொரோனா அறிகுறிகளுடன் வருவோருக்கு பரிசோதனை செய்ய வேண்டும். தமிழகத்தில் தற்போது சுமார் 70 கொரோனா நோயாளிகள் சிகிச்சையில் உள்ளனர். சோதனையில் கொரோனா உறுதியாவது 6.3% ஆக உள்ளது. வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் காய்ச்சிய குடிநீரை அருந்த வேண்டும்; வீட்டின் அருகே நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

அந்த வகையில் கர்நாடகாவில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை அம்மாநில அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி 60வயதுக்கு மேற்பட்டவர்கள், மற்ற உடல்நலப் பிரச்சினைகளால் அவதிப்பட்டு வருபவர்கள், துணை நோய்களுக்கு தொடர் மருந்து சாப்பிடுபவர்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் பொதுஇடங்களில் மாஸ்க் அணிய வேண்டியது அவசியம்.அவசிய தேவைகளை தவிர இவர்கள் வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கூட்ட நெரிசல் உள்ள பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்கும்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. காய்ச்சல், சளி இருமல் என கொரோனா நோய்த்தொற்று அறிகுறி இருப்பவர்கள் உடனடியாகத் தேவையான மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். இவர்கள் மூக்கு, வாய் மூடும் வகையில் முகக்கவசம் அணிய வேண்டியது அவசியம் .

அடிக்கடி கைகளை சானிடைசர் மற்றும் சோப்பால் சுத்தம் செய்து கொள்ள வேண்டும். நோய் அறிகுறி இருப்பவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். சைனஸ், ஆஸ்துமா , நுரையீரல் மற்றும் இதய நோய்களால் பாதிக்கப்பட்டு இருப்பவர்கள் கூட்ட நெரிசல் உள்ள பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். பயண நேரங்களில் மாஸ்க் அணிய வேண்டியது கட்டாயம். நோய்த்தொற்று இருப்பவர்கள் சுயமருத்துவம் பார்ப்பதை தவிர்த்து தகுந்த மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும்.

உலக நாடுகளில் கொரோனா வைரஸின் புதிய திரிபான ஜேஎன் 1 பாதிப்பு வெகுவேகமாக அதிகரித்து வருகிறது. உலக நாடுகளில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 699,830,245. உலகம் முழுவதும் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 6,957,853. உலக நாடுகளில் நேற்று மட்டும் மொத்தம் 21,870 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மொத்தம் 341 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதில் கேரளா மாநிலத்தில் மட்டும் 292 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு பதிவாகி இருக்கிறது. மேலும் கொரோனாவால் கேரளாவில் 3 பேர் மரணம் அடைந்துள்ளனர். கேரளாவில் கொரோனாவுக்கு தற்போது சிகிச்சை பெற்று வருகிற ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 2041 ஆகவும் உயர்ந்துள்ளது.

இந்தியாவில் மொத்தமாக கொரோனாவுக்கு தற்போது சிகிச்சை பெறுகிறவர்கள்- ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 2311. தமிழ்நாட்டில் நேற்று 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.