மாவட்ட ஆட்சியர்: தூத்துக்குடியில் மழை நீரால் பாதிக்கப்பட்ட மக்கள் குறைகளை தெரிவிக்க முகநூல் அறிமுகம்…

தூத்துக்குடி: தூத்துக்குடியில் மழை நீரால் பாதிக்கப்பட்டு வெளியே வரமுடியாமல் இருக்கும் மக்களுக்கு அவசரகால வாட்ஸ்அப் எண்ணை மாவட்ட ஆட்சியர் வழங்கியுள்ளார். திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் கடந்த 17,18ம் தேதிகளில் அதிகனமழை பெய்தது. அதிகனமழையால் தாமிரபரணி ஆற்றில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், பல குளங்களில் உடைப்பு ஏற்பட்டு திருநெல்வேலி, தூத்துக்குடியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது. மின்சாரம் துண்டிக்கப்பட்டது. வெள்ளத்தால் சாலைகள் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தற்போது மழை நின்றுள்ளதால் தாமிரபரணியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு குறைந்துள்ளது. இதனால், பல்வேறு பகுதிகளை சூழ்ந்திருந்த வெள்ளநீர் தற்போது மெல்ல வடியத் தொடங்கியுள்ளது. அதேபோல், மீட்புப்பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இந்த கனமழை வெள்ளத்தால் திருநெல்வேலி, தூத்துக்குடியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தூத்துக்குடியில் மழை நீரால் பாதிக்கப்பட்டு வெளியே வரமுடியாமல் இருக்கும் மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் அவசரகால வாட்ஸ்அப் எண் -7373003588 வழங்கியுள்ளார். மேலும், மக்கள் குறைகளை Collector Thoothukudi என்ற முகநூல் பக்கத்திலும் @Collector Tuty என்ற எக்ஸ் தளத்திலும் தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.