தேனி : வைகை அணையின் நீர் மட்டம் முழு கொள்ளவை எட்டி உள்ளதால் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணை 71 அடி உயரம் கொண்டது. இந்த அணைக்கு நீர்வரத்து மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை சேர்ந்த வரசநாடு மூலவைகை ஆறு மற்றும் முல்லை பெரியாற்றில் இருந்து திறந்து விடப்படும் நீர் வைகை அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. தற்போது, கேரளாவில் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்ததன் காரணமாக மூல்லை பெரியாறு அணையிலிருந்து அதிகப்படியான தண்ணீர் திறந்து விடப்படுகிறது. மேலும் மழை பொழிவு காரணமாக வரசநாடு மூலவைகை ஆற்றிலும் நீர் வரத்து ஏற்பட்டுள்ளது. இதனால், கடந்த 2 தினங்களுக்கு முன்பே 66 அடியை எட்டியதால், முதல் வெள்ள அபாய எச்சரிக்கை கரையோர மக்களுக்கு விடப்பட்டது.
இந்நிலையில் நேற்று காலை 69 அடியை எட்டியதை தொடர்ந்து மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து வைகை ஆற்றுக்கு செல்லக்கூடிய பாதையான தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டு பாதுகாப்பான இடத்தில் இருக்குமாறு நீர்வளத்துறை சார்பாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்நிலையில், வைகை அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது, இதனால் உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த உபரி நீரானது அணையின் 6 மதில்கள் வழியாக திறக்கப்பட்டு, தற்போது தண்ணீர் சீறி பாய்ந்து செல்கிறது. அணையிலிருந்து திறக்கப்பட்டும் நீர் 5 மாவட்ட ஆற்று வழியாக செல்கிறது. அணைக்கு காலை நிலவரப்படி நீர்வரத்து 2375 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் 9.30 மணி நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து சற்று குறைந்து 1900 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. தற்போது, அணையின் முழு கொள்ளளவான 70 அடியை எட்டியதை தொடர்ந்து, அணைக்கு வரும் அனைத்து நீருமே உபரி நீராக வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில், தேனி மாவட்டம் சோத்துப்பாறை, மஞ்சளாறு அணை மற்றும் சிற்றோடைகள் என அனைத்து ஓடைகளில் இருந்து நீர் வரத்தும் வைகை அணைக்கு வருகிறது. இதனால், வெள்ளம் கரைபுரண்டு ஓடுவது போல வைகை ஆறு காட்சி அளிக்கிறது. இந்நிலையில், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை சார்பாக கேட்டுக்கொள்ளப்பட்டது.