வாவ்! சூப்பர்!!முதியோர் கல்வி திட்டத்தில் சேர்ந்து பிளஸ்-1 தேர்வு எழுதியதோடு கவிதை தொகுப்பையும் வெளியிட்ட 67 வயது மூதாட்டி அசத்தல்..!!

கேரளாவில் முதியோர் கல்வி திட்டத்தில் 90 வயதை கடந்தவர்களும் சேர்ந்து படித்து சாதனை படைத்து வருகிறார்கள். தள்ளாத வயதிலும் மனம் தளராமல் படித்து சாதனை படைத்த கேரள மூதாட்டிகளை பிரதமர் மோடி பாராட்டி உள்ளார். அந்த வகையில் இப்போது நெய்யாற்றின் கரையை சேர்ந்த சந்திரமணி என்ற 67 வயது மூதாட்டி பிளஸ்-1 தேர்வு எழுதி உள்ளார். சந்திரமணி பிளஸ்-1 தேர்வு எழுத தயாரான போதே தன்னை பற்றிய ஒரு கவிதை தொகுப்பையும் எழுதினார். என்றே ஸ்வர்ணா மந்தாரபூ என்ற அந்த கவிதை தொகுப்பை புத்தகமாக வெளியிட நெய்யாற்றின் கரை நகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்தது. இதையடுத்து அந்த கவிதை புத்தகம் வெளியிடப்பட்டது.
சந்திரமணி எழுதிய கவிதை தொகுப்புக்கு பலரும் பாராட்டு தெரிவித்தனர். சமூக வலைதளத்திலும் பாராட்டுகள் குவிந்து வருகிறது. இதுபற்றி சந்திரமணி கூறும்போது, படிக்கும் காலத்தில் தேர்வில் வெற்றி பெறமுடியாமல் போனது. இதனால் பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தும் நிலை ஏற்பட்டது. அதன்பின்பு திருமணமாகி குழந்தைகளும் பிறந்தன. பின்னர் அவர்களுக்காக வாழ்க்கையை ஓட்டினேன். குழந்தைகள் அனைவரும் பெரியவர் ஆனபின்பு அவர்கள் தான் என்னை மீண்டும் படிக்க வற்புறுத்தினார்கள். இதனால் 10-ம் வகுப்பு தேர்வை எழுதி வெற்றி பெற்றேன். அடுத்து பிளஸ்-1 தேர்வு எழுதி உள்ளேன். அப்போதுதான் என்னை பற்றி நானே எழுதிய கவிதை தொகுப்பு பற்றிய தகவலை உறவினர்களிடம் தெரிவித்தேன். அவர்கள் தான் இதனை புத்தகமாக வெளியிட கூறினர், என்றார்.