தற்காத்துக் கொள்ள வெளியில் செல்லும்போது பெண்கள் பாதுகாப்பு உபகரணங்களை வைத்துக் கொள்ள வேண்டும் – இபிஎஸ் அட்வைஸ்..!

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த வாரம் அண்ணா பல்கலைக்கழக மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த நபருடன் பேசிய ‘யார் அந்த சார்?’ என்பதை இதுவரை கண்டுபிடிக்கவில்லை.

இந்நிலையில், கடந்த 29ம் தேதி ராமநாதபுரத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த பெண் ஒருவர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக செய்திகள் வருகின்றன. மேலும் சென்னை, வில்லிவாக்கத்தில் ேநற்று 10 வயது சிறுமி ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதாகவும், ஒசூரில் 80 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதாகவும் வரும் செய்திகள் அனைவரையும் மிகவும் கவலையில் ஆழ்த்தியுள்ளன.

எனவே, பெண்கள் தங்களை தற்காத்துக்கொள்ள, வெளியில் செல்லும்போது தற்காப்புக்கான Spray, Emergency SOS Alarm உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். தமிழ்நாட்டில் இப்படியொரு நிலை வந்ததற்கு, உங்களை போன்றே நானும் வருந்துகிறேன். பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிராக பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடும் காமுகர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க தமிழக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.