பிரதமர் பதவி மட்டும் வேண்டவே வேண்டாம்… சிறுவனிடம் சட்டென சொன்ன மோடி- கலபுரகியில் ஒரு சுவாரசிய நிகழ்வு..!

பெங்களூர்: பிரதமர் நரேந்திர மோடி நேற்று கர்நாடகாவில் பிரசாரம் செய்தார். இந்த வேளையில் அவர் சிறுவர், சிறுமிகளுடன் ஜாலியாக உரையாடியானார்.

இந்த வேளையில் சிறுவன் ஒருவன் சொன்ன பதிலை கேட்ட பிரதமர் மோடி, ”பிரதமர் பதவி மட்டும் வேண்டவே வேண்டாம்” எனக் கூறினார்.

கர்நாடகாவில் பாஜக ஆட்சி நடக்கிறது. மே மாதம் 24ம் தேதியுடன் அங்கு 5 ஆண்டு ஆட்சிக்காலம் முடிவுக்கு வர உள்ளது. இதனால் அங்குள்ள 224 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த முடிவு செய்துள்ளது. அதன்படி வரும் 10ம் தேதி கர்நாடகா சட்டசபை தேர்தலை நடத்த இந்திய தேர்தல் ஆணையம் தேதி குறித்துள்ளது.

இந்த தேர்தலில் பதிவாகும் ஓட்டுக்கள் மே 13ல் எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட்டு விடும். தேர்தலுக்கு இன்னும் 7 நாட்கள் மட்டுமே உள்ளதால் ஆளும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ், ஜேடிஎஸ் உள்பட பல கட்சிகள் தீவிர பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

நடைபெறும் தேர்தலில் காங்கிரஸை வீழ்த்தி ஆட்சியை தக்க வைக்கும் முனைப்பில் பாஜக செயல்பட்டு வருகிறது. நேற்று பாஜகவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. மேலும் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்பட பாஜக மேலிட தலைவர்கள் கர்நாடகாவில் முகாமிட்டு தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர்.

பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் சுற்றுப்பயணத்தில் கர்நாடகாவில் உள்ளார். இந்நிலையில் தான் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரான மல்லிகார்ஜூன கார்கேவின் சொந்த மாவட்டமான கலபுரகியில் நேற்று பிரதமர் மோடி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். பிரதமர் மோடி மீது மலர்களை தூவி கட்சியினர் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.

முன்னதாக பிரதமர் மோடி தனது பிரசாரத்துக்கு செல்லும் வழியில் அவரை பார்க்க ஏராளமானவர்கள் காத்திருந்தனர். அப்போது சிறுவர், சிறுமிகளை பார்த்த பிரதமர் மோடி திடீரென அவர்கள் அருகே சென்று கலந்துரையாடினார். இந்த வேளையில் பிரதமர் மோடி, , ”நீங்கள் அனைவரும் பள்ளி செல்கிறீர்களா?” என கேள்வி எழுப்பினர். அதற்கு அவர்கள் அனைவரும் ”எஸ் சார்” என கோரஸாக பதிலளித்தனர். இதை கேட்ட மோடி, ”தினமும் பள்ளிக்கு சென்று நன்றாக படிக்க வேண்டும்” என சிரித்தபடி அறிவுரை வழங்கினார்.

அதன்பிறகு அவர்களின் எதிர்கால குறிக்கோள் என்ன? பிரதமர் மோடி கேள்வி எழுப்பினார். அப்போது ஒருவர், ”போலீஸ்” என கூறினார். இதை கேட்ட மோடி, ”வாவ்” என்றார். இன்னொருவர், ”டாக்டர்” எனவும், மற்றொருவர், ”உங்களின் செயலாளர்” என பதிலளித்தார். இதை கேட்ட பிரதமர் மோடி, ”பிரதமர் பதவி மட்டும் வேண்டவே வேண்டாம்” என கூறிவிட்டு புறப்பட்டு சென்றார். இதை கேட்ட அனைவரும் சிரித்தனர்.

பிரதமர் பதவி மட்டும் வேண்டாம் என மோடி சொல்வதற்கான காரணம் என்னவாக இருக்கும்? என கேள்வி எழுப்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.