நகை வாங்குவது போல் நடித்து தங்க கம்மல் அபேஸ் செய்த பெண் கைது..!!

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோட்டில் பிரபலமான ஜூவல்லரி உள்ளது. இங்கு நேற்று நகைகளை ஊழியர்கள் ஆய்வு செய்தபோது சுமார் 3 கிராம் எடையிலான ரூ.12 ஆயிரம் மதிப்பிலான தங்க கம்மல் திருடு போனது தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் இது குறித்து மேலாளருக்கு தகவல் கொடுத்தனர். அவர் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தார். அப்போது வாடிக்கையாளராக வந்த பெண் ஒருவர் கம்மல் வாங்குவது போல் நடித்து தான் கொண்டு வந்த கவரிங் கம்மலை வைத்து விட்டு 3 கிராம் தங்க கம்மலை திருடி சென்றது தெரியவந்தது. இது தொடர்பாக காட்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், போலீசார் நகை திருடிய பெண் யார்? என்பது குறித்து விசாரித்தனர். அதில், நகை திருடியது கவுண்டம்பாளையம்-மேட்டுப்பாளையம் ரோடு கருப்பசாமி நகரை சேர்ந்த மணிபிரியா(37) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்து தங்க கம்மல் பறிமுதல் செய்யப்பட்டது.