ஆன்லைனில் காற்றாடி,மாஞ்சா நூல் விற்பனை- 1500 காற்றாடிகள்,600 மாஞ்சா நூல் உருண்டைகள் பறிமுதல்…!

சென்னை வியாசர்பாடி பகுதியில் காற்றாடி விடும் சிறுவர்களை பிடித்து விசாரணை செய்ததில் அவர்கள் ஆன்லைன் மூலம் காற்றாடி வாங்குவது தெரிய வந்தது இதனை அடுத்து வியாசர்பாடி போலீசார் வாட்ஸ் அப்பில் 50 காற்றாடிகள் அடங்கிய பண்டல் 600 ரூபாய்க்கு ஆர்டர் செய்தனர்.

அதனை டெலிவரி செய்ய வந்தவரை பிடித்து போலீசார் விசாரித்த போது, தான் வெறும் டெலிவரி செய்யும் நபர் மட்டுமே என்றும் பார்சல்களை அவர்கள் வழங்கும் முகவரியில் கொடுப்பது மட்டுமே தனது வேலை என்றும் கூறியுள்ளார்.

இதனைதொடர்ந்து அவர் பார்சல் எடுத்த இடம், எந்த இடம் என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து நேற்று மாலை, அண்ணா நகர் முத்துமாரியம்மன் கோவில் தெரு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சோதனை செய்தனர். அங்கு பண்டல் பண்டலாக 1500 காற்றாடிகள், மாஞ்சா நூல் தயாரிக்க பயன்படுத்தப்படும் 600 மாஞ்சா நூல் உருண்டைகள் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர். போலீசார் வருவதை முன் கூட்டியே அறிந்த மாஞ்சா நூல் தயாரிக்கும் நபரான பார்த்திபன்(29) என்ற நபர் தலைமறைவானார்.

இதனையடுத்து நேற்று வியாசர்பாடி போலீசார், அவரை இன்று காலை கைது செய்தனர். போலீசார் பார்த்திபனிடம் நடத்திய விசாரணையில் கடந்த ஒன்றரை வருடங்களாக இரண்டு வாட்ஸ் அப் எண்கள் வைத்து ஆன்லைன் மூலம் காற்றாடி மற்றும் மாஞ்சா நூல் விற்பனை செய்து வருவதாகவும் தற்போது கடைகளில் மாஞ்சா நூல் விற்பனை போலீசாரால் கட்டுப்படுத்தப்பட்டதால் காற்றாடி மற்றும் மாஞ்சாநூலுக்கு நல்ல மவுசு இருப்பதால் தொடர்ந்து அதனை விற்று வந்ததாகவும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து பார்த்திபன் மீது வழக்கு பதிவு செய்த வியாசர்பாடி போலீசார் தொடர்ந்து அவரிடம் விசாரணை கொண்டு வருகின்றனர்.