தமிழகத்தில் தற்போது கொரோனா 3-வது அலை படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் தமிழகத்தில் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் திறக்கப்பட்டு தற்போது நேரடி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மீண்டும் பள்ளிகளை மூட வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் கூறுகையில், பள்ளிகள் மாணவர்களுடைய நலன் கருதி திறக்கப்பட்டது வரவேற்கத்தக்கது.
இருப்பினும் நடப்பு கல்வியாண்டு முடிய இன்னும் 2 மாதங்களே உள்ளது. அதேபோல் ஏப்ரல் மாதத்திற்கு பிறகு கோடை விடுமுறை வர உள்ளது. அதோடு மட்டுமில்லாமல் 1-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இந்த கொரோனா காலகட்டத்தில் தேர்வு நடத்தப்படுவது சந்தேகமே. அவர்களுக்கு தேர்வு நடத்துவதற்கான வாய்ப்பு குறைவு. எனவே தற்போது கொரோனா தொற்று பரவல் குறைந்து வந்தாலும் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளை மூட வேண்டும்.
அதேபோல் பாடங்களை ஆன்லைன் வாயிலாக நடத்தலாம். பொதுத்தேர்வு எழுத உள்ள 10 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடத்த அனுமதிக்கலாம். அனைத்து வகுப்புகளுக்கும் அடுத்த கல்வி ஆண்டு முதல் நேரடி வகுப்புகளை புத்துணர்ச்சியுடன் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். ஏற்கனவே பள்ளிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் காரணமாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் விரைவில் இதுகுறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
Leave a Reply