சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு: ரூ.1 கோடி தங்கம், ரூ.46 லட்சம் வெளிநாட்டு கரன்சி பறிமுதல்-6 பேர் கைது.!!

சென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூ.1 கோடி தங்கம், வெளிநாட்டு கரன்சி பிடிப்பட்டது. இது தொடர்பாக 6 ேபரை சுங்கத்துறையினர் கைது செய்தனர்.

சென்னை மீனம்பாக்கம் சர்வதேச விமான நிலையத்துக்கு துபாய் விமானம் வந்தது. பின்னர் அந்த விமானம் ஐதராபாத்துக்கு செல்ல வேண்டும். எனவே, விமான ஊழியர்கள் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டபோது, ஒரு சீட்டுக்கு அடியில் 6 தங்கக் கட்டிகள் அடங்கிய பார்சலை கண்டுபிடித்தனர். இது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர்.

அதிகாரிகள் ஆய்வு செய்தபோது 6 தங்கக் கட்டிகள் 700 கிராம் எடை இருந்தது. அதன் மதிப்பு ரூ.31 லட்சம். துபாயில் இருந்து ஃபிளை துபாய் பயணிகள் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு நேற்று முன் தினம் வந்தது. சென்னையை சேர்ந்த 5 பயணிகள் ஒரே குழுவாக வந்தனர். அவர்களை தனி அறைக்கு அழைத்து சென்று முழுமையாக சோதனை நடத்தினர். அப்போது அவர்கள் உள்ளாடைகளுக்குள் 24 தங்கக் கட்டிகளை மறைத்து வைத்திருந்தனர்.

அவர்களிடம் இருந்து 1.5 கிலோ எடை கொண்ட ரூ.65 லட்சம் மதிப்பு தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் 5 பேரையும் கைது செய்து தங்கக் கட்டிகளை பறிமுதல் செய்தனர். சென்னையில் இருந்து துபாய் செல்லும் ஃபிளை துபாய் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட தயாராகிக் கொண்டிருந்தது. அதில் செல்லவிருந்த பயணிகளை அதிகாரிகள் சோதனையிட்டனர். மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த ஹரீஸ் ஹங்வாணி (52) என்பவர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டதால் அவரை நிறுத்தி சோதனை நடத்தினர்.

அவரது சூட்கேஸ்சில் ரகசிய அறைக்குள் மறைத்துவைத்திருந்த ரூ.46 லட்சம் வெளிநாட்டு கரன்சிகளை பறிமுதல் செய்தனர். சென்னை விமான நிலையத்தில் தங்கம், வெளிநாட்டு கரன்சி பறிமுதல் செய்து 6 பேரை கைது செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியது.