பலாப்பழங்களை ருசிக்க தேயிலை தோட்டங்களில் குட்டியுடன் உலா வரும் காட்டு யானைகள்..!!

கோத்தகிரி அருகே சோலூர்மட்டம் பகுதியை சுற்றி, குமரமூடி, கரீக்கையூர், அரக்கோடு, குள்ளங்கரை, முடியூர், வக்கனாமரம், மெட்டுக்கல் என 40-க்கும் மேற்பட்ட பழங்குடியின கிராமங்கள் உள்ளது. இந்த பகுதிகளில் அதிகளவிலான பலாமரங்கள் உள்ளன. தற்போது பலாப்பழ சீசன் என்பதால், பலாப்பழங்கள் அதிகளவில் காய்த்து தொங்குகின்றன. இந்த பழங்களை சாப்பிடுவதற்காக காட்டு யானைகள் அதிகளவில் வருகின்றன. யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், கிராம மக்கள் அச்சத்துடனேயே பணிக்கு சென்று வருகின்றனர். இந்த நிலையில் குட்டியுடன் சுற்றி திரியும் யானை கூட்டம் நேற்று குமரமூடி பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் முகாமிட்டது. இதை பார்த்த தொழிலாளர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றனர்.
நீண்ட நேரம் அங்கேயே சுற்றி திரிந்த யானை கூட்டம் அங்கிருந்த பலாப்பழத்தை பறித்து சாப்பிட்டது. பின்னர் அங்கிருந்து சென்றது. இதுகுறித்து மக்கள் கூறுகையில், கடந்த சில மாதங்களாகவே காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது.குறிப்பாக தேயிலை தோட்டங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் சுற்றுவதால் வேலைக்கு செல்ல முடியவில்லை. வீடுகளை விட்டு வெளியில் வரவும் பயமாக உள்ளது. எனவே தேயிலை தோட்டங்களில் முகாமிட்டு உள்ள காட்டு யானை கூட்டங்களை வனத்துறையினர் வாகன ரோந்து மேற்கொண்டு அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.