ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளித்த அப்பல்லோவில் சிசிடிவி அகற்றம் ஏன்? ஜெ. பாதுகாவலர் வீரபெருமாள் வாக்குமூலம்..!

சென்னை : ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்த அப்பல்லோ மருத்துவமனையில் 27 சிசிடிவி கேமிராக்கள் செயல்படாமல் இருந்தது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், அதுகுறித்த கேள்விக்கு ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் விடை கிடைத்துள்ளது.

ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரியாக நீண்ட காலம் பணியாற்றிய வீரபெருமாள், அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகி ஆகியோர் இதுகுறித்து ஆறுமுகசாமி ஆணையத்திற்கு வாக்குமூலம் அளித்துள்ளனர்.

அப்பல்லோ மருத்துவமனையில் 27 சிசிடிவி கேமிராக்கள் அணைக்கப்பட்டது. யார் உத்தரவின்படி அணைக்கப்பட்டது எனத் தெரியாது என ஜெயலலிதாவின் பாதுகாவலராக இருந்த வீரபெருமாள் கூறியுள்ளார்.

மேலும், ஜெயலலிதாவை ஸ்கேனுக்கு அழைத்து செல்லும்போது மட்டும் சிசிடிவி கேமிராக்கள் அணைத்து வைக்கப்படும் என அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகி சுப்பையா விஸ்வநாதன் வாக்குமூலம் அளித்ததாக ஆறுமுகசாமி ஆணையம் பதிவு செய்துள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக குற்றம்சாட்டப்பட்ட நிலையில் தமிழக அரசு ஆறுமுகசாமி ஆணையத்தை அமைத்தது. ஆறுமுகசாமி ஆணையம், அப்பல்லோ மருத்துவர்கள், ஜெயலலிதா இல்லத்தின் பணியாளர்கள், உதவியாளர்கள், பாதுகாவலர், சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 100ற்கும் மேற்பட்டோரை விசாரித்தது. விசாரணையின் முடிவில் ஆறுமுகசாமி ஆணையம் தமிழக முதல்வரிடம் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக அறிக்கையை சமர்ப்பித்தது. ஆறுமுகசாமியின் அறிக்கை நேற்று  தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த அறிக்கையில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தபோது ஏன் சிசிடிவி கேமராக்கள் இயங்கவில்லை என்ற கேள்வி இன்றளவும் இருந்து வருகிறது. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் ஒரு முதல்வர் சிகிச்சை பெற்ற மருத்துவமனையில் சிசிடிவி கேமராக்கள் இருந்தும் ஏன் இயங்கவில்லை? ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதை இதுவே உறுதி செய்கிறது என குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த நிலையில் அப்பல்லோ மருத்துவமனையில் சிசிடிவி கேமராக்கள் இயங்காதது குறித்து ஜெயலலிதாவின் பாதுகாவலர் வீரபெருமாள் ஆறுமுகசாமி ஆணையத்திடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் தெரிவித்திருக்கிறார். அப்பல்லோ மருத்துவமனையில் 27 சிசிடிவி கேமராக்கள் அணைக்கப்பட்டன. யார் உத்தரவில் அணைக்கப்பட்டது என்று எனக்குத் தெரியாது என ஜெயலலிதாவின் பாதுகாவலராக இருந்த வீர பெருமாள் கூறியிருக்கிறார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பாதுகாப்புக்காக வரும் கான்வாய் ஓரத்தில் தொங்கியபடி வரும் பாதுகாப்பு அதிகாரி மிகவும் பிரபலம். சஃபாரி உடையில் மிடுக்காக வரும் அந்த பாதுகாப்பு அதிகாரி தான் வீரபெருமாள். ஜெயலலிதாவின் கண் அசைவைக்கூடப் புரிந்துகொண்டு செயல்படக்கூடியவர் என்று பெயர் எடுத்தவர் அவர். ஜெயலலிதா காலமானபோது அப்பல்லோவிலிருந்து போயஸ் கார்டன் வீடு வரை கொண்டு செல்லப்பட்ட முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடலுக்குப் பாதுகாப்பு அளித்ததும் வீரபெருமாள் தலைமையிலான டீம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

சிசிடிவி கேமராக்கள் அணைத்து வைக்கப்பட்டிருந்தது பாதுகாப்பு அதிகாரி வீரபெருமாள் கூறியதன் அடிப்படையில் உறுதியான நிலையில், மேற்கொண்டு அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகத்திடம் ஆறுமுகசாமி ஆணையம் இதுகுறித்த கேள்விகளை எழுப்பியது. அப்பல்லோ மருத்துவமனையில் விதிமுறைகளின் படி சிசிடிவி கேமராக்கள் பராமரிக்கப்படுவதாகவும், சிசிடிவி அணைத்து வைக்கப்பட்டது பற்றி தெரியாது என்றும் மருத்துவமனை சாட்சியங்கள் வாக்குமூலம் அளித்தன.

எனினும், ஜெயலலிதாவை ஸ்கேனுக்கு அழைத்துச் செல்லும்போது மட்டும் சிசிடிவி கேமராக்கள் அணைக்கப்படும் என்று அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகி சுப்பையா விஸ்வநாதன் வாக்குமூலத்தில் தெரிவித்திருக்கிறார். சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தலைமைச் செயலாளர் ராம் மோகன் ராவ் அறிவுறுத்தலின்படியே சிசிடிவி கேமராக்கள் அணைக்கப்பட்டன. சிசிடிவி கேமராக்கள் அணைக்கப்பட்டதால் பாதுகாப்பு நடவடிக்கைகளில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் அவர் வாக்குமூலம் அளித்திருப்பதாக ஆறுமுகசாமி ஆணையம் குறிப்பிட்டுள்ளது.