இந்தியாவில் 15 ஆண்டுகளில் வறுமையில் இருந்து 41.5 கோடி ஏழை மக்கள் மீட்பு – ஐ.நா பாராட்டு..!

வாஷிங்டன்: இந்தியாவில் 2005ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரையிலான 15 ஆண்டுகளில் சுமார் 41.5 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர்.

ஆனாலும், உலகிலேயே அதிக ஏழை மக்கள் கொண்ட முதல் நாடாக இந்தியா உள்ளதாக ஐநா அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் வளர்ச்சி திட்டம் மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் ஓபிஎச்ஐ ஆகியவற்றின் சார்பில் பல பரிமாண வறுமை குறியீடு அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது. இதன்படி, இந்தியாவில் கடந்த 2005-2006ம் ஆண்டு முதல் 2019-2021ம் ஆண்டு வரையிலான 15 ஆண்டு காலத்தில் இந்தியாவில் சுமார் 41.5கோடி மக்கள் வறுமையின் பிடியில் இருந்து மீண்டுள்ளனர். இது வரலாற்று சிறப்பு மிக்க மாற்றம் என ஐக்கிய நாடுகள் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் 2020ம் ஆண்டு மக்கள் தொகை தரவுகளின் அடிப்படையில் உலக அளவில் அதிக ஏழை மக்களை கொண்ட நாடாக இந்தியா உள்ளது. இந்தியாவில் 22.89 கோடி ஏழை மக்கள் உள்ளனர். இதனை தொடர்ந்து 9.67 கோடி ஏழை மக்களுடன் நைஜீரியா அடுத்த இடத்தில் உள்ளது. வறுமை குறைந்திருந்தாலும் உலகில் இன்னும் அதிக ஏழை குழந்தைகளை கொண்ட நாடாக இந்தியா உள்ளது. 2019ம் ஆண்டின்படி இந்தியாவில் இன்னும் 9.7கோடி ஏழை சிறுவர்கள் உள்ளனர். 9.7 கோடி குழந்தைகள் அல்லது 0-17 வயதுடைய குழந்தைகளில் 21.8சதவீதம் பேர் ஏழைகள். இது பல பரிமாண வறுமை குறியீட்டின் கீழ் உலகளாவிய அளவில் வேறு எந்த நாட்டிலும் உள்ள மொத்த ஏழைகள், சிறுவர்கள், பெரியவர்கள் எண்ணிக்கையை காட்டிலும் அதிகமாகும்.