சமூக நீதி பேசும் ராமதாஸ் பாஜகவுடன் கூட்டணி வைத்தது ஏன்..? – தருமபுரி பொது கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கேள்வி..?

தருமபுரி: சமூக நீதி பேசும் பாமக நிறுவனர் ராமதாஸ் சமூக நீதிக்கு எதிரான பாஜக.வுடன் கூட்டணி வைத்தது ஏன்..?

என்று தருமபுரியில் நடந்த மக்களவைத் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

தருமபுரி மக்களவைத் தொகுதியில் ‘இண்டியா’ கூட்டணியில் திமுக சார்பில் போட்டியிடும் ஆ.மணி, கிருஷ்ணகிரி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத் ஆகியோரை ஆதரித்து தருமபுரி அடுத்த தடங்கம் பகுதியில் நேற்று இரவு பிரச்சார பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று பேசியது:

நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தல், இந்திய வரலாற்றில் முக்கியமான தேர்தல். இளைய தலைமுறையை காக்க, சமூக நீதி நீடிக்க,ஜனநாயகத்தை பாதுகாக்க, வேற்றுமையில் ஒற்றுமையை ஏற்படுத்த, அரசியல் சட்டத்தைப் பாதுகாக்க, டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடி கவுரவமாகப் பறக்க பாஜக அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். சமூக நீதிக்கு குழிதோண்டும் கட்சி, நாட்டைப் பிளவுபடுத்தி குளிர்காய பாஜக நினைக்கிறது. எனவே, பாஜக மீண்டும் ஆட்சிக்கு வராமல் தடுக்க வேண்டும்.

சமூக நீதி பேசுகிற பாமக நிறுவனர் ராமதாஸ் தற்போது எங்கே இருக்கிறார்? சமூக நீதிக்கு எதிராகபேசும் பாஜக.வுடன் இருக்கிறார். அதற்கான காரணம் தருமபுரி மாவட்ட மக்கள் உட்பட அனைவருக்கும் தெரியும். பாஜக கூட்ட ணியை பாமக தொண்டர்கள் மனதளவில் விரும்பவில்லை.

1969-ல் பிற்படுத்தப்பட்டோர், ஆதி திராவிடருக்கென தனித்தனி துறையை உருவாக்கியவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி. 1989-ல் திமுக ஆட்சி அமைந்து 43 நாட்களில் வன்னியர் உள்ளிட்ட சாதியினருக்கு 20 சதவீதம் இட ஒதுக்கீட்டை அன்றைய முதல்வர் கருணாநிதி வழங்கினார். அந்த போராட்டத்தில் உயிரிழந்த 21 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் வழங்கினார்.

இன்று நம் கோரிக்கையை ஏற்று,சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவும், இடஒதுக்கீடு சதவீதத்தை அதிகரிக்கவும் வாக்குறுதி அளித்திருக்கும் ஒரே தேசிய கட்சி காங்கிரஸ் தான். பாஜக தேர்தல் அறிக்கையில் அதுபோன்ற வாக்குறுதி உண்டா?

தமிழகத்தின் அனைத்து தரப்பு மக்களும் பயனடையும் வகையில் பல்வேறு திட்டங்களை தமிழக அரசுகடந்த 3 ஆண்டுகளில் அறிவித்து செயல்படுத்தி வருகிறது. இதுபோன்ற நல்லாட்சி ‘இண்டியா’ கூட்டணி மூலம் டெல்லியிலும் நடக்க வேண்டும் என்றுதான் பல்வேறு வாக்குறுதிகளை தற்போது தேர்தல் அறிக்கையாக வழங்கி இருக்கிறோம்.

விவசாயிகளுக்கு பாஜக அரசு செய்தது போன்ற கொடுமையை இந்திய வரலாற்றில் எந்தப் பிரதமரும் செய்திருக்க மாட்டார்கள். பாஜகவின் 10 ஆண்டுகால ஆட்சியின் அடையாளம் ரபேல் ஊழல், சிஏஜி ஊழல், தேர்தல் பத்திர ஊழல். இதற்கெல்லாம் தேர்தலுக்குப் பின் நீங்கள் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும்.

தேர்தல் வருவதால் சமையல் எரிவாயு விலை குறைப்பு, ஊரக வேலை உறுதித் திட்ட ஊதிய உயர்வு நாடகம் நடத்துகிறீர்கள் என்பது மக்களுக்குத் தெரியும்.

வரவுள்ள மக்களவைத் தேர்தலில், பாஜக.வுடன் வெளிப்படை யாகக் கூட்டணி அமைத்திருப்பவர் களும், கள்ளக் கூட்டணி அமைத்து தமிழ்நாட்டுக்கு துரோகம் இழைக்கும் பழனிசாமி கூட்டமும் தோற்கடிக்கப்பட வேண்டும். உங்கள் வாக்கு இந்தியாவையும், ஜனநாயகத்தையும் காக்கும் வாக்காக அமையட்டும் இவ்வாறு முதல்வர் பேசினார்.

கூட்டத்தில், அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சக்கரபாணி, தருமபுரி மாவட்ட திமுக செயலாளர்கள் தடங்கம்சுப்பிரமணி (கிழக்கு), பழனியப்பன் (மேற்கு) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.