டெல்லி: 250 வார்டுகள் கொண்ட டெல்லி மாநகராட்சிக்கு கடந்த 4ம் தேதி தேர்தல் நடந்த நிலையில் இன்று 42 மையங்களில் காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை துவங்கியது.
கடந்த 2007 முதல் பாஜக அதிகாரத்தை கைப்பற்றிய நிலையில் இந்த தேர்தலில் ஆம்ஆத்மி வெற்றி பெறலாம் என கருத்து கணிப்புகள் வெளியாகி உள்ளன. இதனால் டெல்லி மாநகராட்சி தேர்தலில் பாஜக, ஆம்ஆத்மி இடையே கடும் போட்டி நிலவுகிறது.
டெல்லி மாநகராட்சியை 2007 முதல் தொடர்ந்து 3 தேர்தலில் பாஜக கைப்பற்றி வருகிறது. 2007 ல் ஒரு மாநகராட்சியாக டெல்லி இருந்தது. கடந்த 2012 தேர்தலில் டெல்லி மாநகராட்சி 3 ஆக பிரிக்கப்பட்டது.
டெல்லி வடக்கு, டெல்லி தெற்கு, டெல்லி கிழக்கு என 3 மாநகராட்சிகள் உருவாகின. இந்த 3 மாநகராட்சிகளுக்கும் 2012, 2017 ல் தேர்தல் நடந்தது. இந்த 2 தேர்தல்களிலும் பாஜகவே வெற்றி பெற்றது.
டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம்ஆத்மி ஆட்சி நடந்தாலும் கூட மாநகராட்சி தேர்தலை பொறுத்தமட்டில் பாஜகவின் கையே ஓங்கி இருந்தது. தற்போது டெல்லி மாநகராட்சி மீண்டும் ஒன்றாக மாற்றப்பட்டது. 3 மாநகராட்சிகள் ஒன்றாக இணைக்கப்பட்டு 250 வார்டுகள் கொண்ட ஒரே மாநகராட்சியாக மாற்றப்பட்டது. இந்த மாநகராட்சிக்கு டிசம்பர் 4ல் தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
பாஜக, காங்கிரஸ், ஆம்ஆத்மி இடையே தான் மும்முனை போட்டி நிலவி வருகிறது. தற்போதைய தேர்தலில் பாஜக, ஆம்ஆத்மி சார்பில் மொத்தம் 250 வார்டுகளுக்கும் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். காங்கிரஸ் சார்பில் 3 வேட்பாளர்களின் மனுக்கள் தள்ளுபடியானதால் 247 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மொத்தமாக 709 பெண்கள் உட்பட மொத்தம் 1,349 வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர்.
கடந்த 4ம் தேதி நடந்த டெல்லி மாநகராட்சி தேர்தல் நடந்தது. மொத்தம் 1.45 கோடி வாக்காளர்களுக்காக 13,638 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டன. அன்றைய தினம் காலை 8 மணிக்கு துவங்கிய ஓட்டுப்பதிவு மாலை 5.30 மணி வரை நடந்தது. இந்த தேர்தலில் மொத்தம் 50 சதவீத ஓட்டுக்கள் மட்டுமே பதிவாகின.
இந்த தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாக உள்ளன. இன்று மொத்தம் 42 மையங்களில் ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அதன்படி காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை துவங்கியது. அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் ஓட்டு எண்ணும் மையத்தை சுற்றி 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் இன்றைய ஓட்டு எண்ணிக்கையால் டெல்லி மாநகராட்சியை கைப்பற்றப்போவது யார்? என்பது இன்று மதியம் தெரிந்துவிடும்.
முன்னதாக தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியிடப்பட்டன. இதில் டெல்லி மாநகராட்சியை ஆம்ஆத்மி கட்சி கைப்பற்றும் என கூறப்பட்டுள்ளன. அதன்படி ஜான்கி பாத் மற்றும் நியூஸ் நடத்திய கருத்து கணிப்பில் ஆம்ஆத்மி கட்சி 150 முதல் 175 இடங்களில் வெற்றி பெறும் எனவும், பாஜக 92 முதல் 72 இடங்களிலும் வாகை சூடும் எனவும், காங்கிரஸ் கட்சி 7 முதல் 4 இடங்களிலும் வெற்றி பெறும் என கணித்து கூறியது. டைம்ஸ் நவம்-நவ்பாரத் இடிஜி நடத்திய கருத்து கணிப்பில் பாஜக 84 முதல் 94 இடங்களிலும், ஆம்ஆத்மி 146 முத்ல 156 இடங்களிலும் காங்கிரஸ் 6 முதல் 10 இடங்களிலும் வெற்றி பெறும் என கூறியது.
டெல்லி மாநகராட்சியில் கடந்த 2007 முதல் பாஜக 15 ஆண்டுகளாக அதிகாரத்தில் இருந்து வருகிறது. இந்நிலையில் தான் தற்போது கருத்து கணிப்புகள் இப்படி வந்துள்ளது. இது நடக்கும் பட்சத்தில் டெல்லி மாநகராட்சியின் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுவதுடன் ஆம்ஆத்மி முதல் முறையாக அதிகாரத்தை கைப்பற்றும். இதன்மூலம் டெல்லியில் ஆம்ஆத்மி ஆட்சி நடக்கும் நிலையில் மாநகராட்சியிலும் அந்த கட்சி அதிகாரத்தில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply