கோவையில் நாட்டிய பள்ளியில் சிலைகள் திருடிய சி.சி.டி.வி காட்சிகள் – மது பாட்டில்கள் வாங்க திருடிய இருவர் கைது…
கோவை சுந்தராபுரம் செங்கப்ப கோனார் வீதியை சேர்ந்தவர் முரளி (50). இவர், அதே பகுதியில் நாட்டியப் பள்ளி நடத்தி வருகிறார். இந்நிலையில் சனிக்கிழமை நள்ளிரவு நாட்டிய பள்ளிக்கு வந்த மர்ம நபர்கள் கதவை உடைத்து, அங்கிருந்த நடராஜர் சிலை, சிவகாமி அம்மன் சிலை, நந்தி சிலை, விநாயகர் சிலை, யானை சிலை, இரண்டு குத்து விளக்குகள் ஆகியவை திருடிச் சென்றனர். திருட்டு தொடர்பான சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்து வந்த குனியமுத்தூர் போலீசார், சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
அந்த சி.சி.டி.வி காட்சிகளில், இரண்டு மர்ம நபர்கள் கட்டை பையில் சிலைகளை வைத்து எடுத்துச் சென்றது பதிவாகியிருந்தது. இதையடுத்து தலைமறைவான மர்ம நபர்களை போலீஸார் தீவிரமாக தேடி வந்த நிலையில், சுந்தராபுரம் மாச்சம்பாளையம் ஆறுமுக கவுண்டர் வீதியை சேர்ந்த கார்த்திக் (25) மற்றும் கிரண் (22) என்ற இருவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், இருவரும் போதையில் கூடுதல் மது பாட்டில்களை வாங்க திருடியது தெரியவந்தது.
இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்த சிலைகளை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Leave a Reply