யாருங்க டெம்பரவரி..?எனது பதவி தொண்டன் கொடுத்த பதவி… பர்மனன்ட் பதவி… முதல்வருக்கு பதிலடி கொடுத்த இபிஎஸ்..!!

சென்னை : எனது பதவி தொண்டன் கொடுத்த பதவி. பர்மனன்ட் பதவி. ஸ்டாலின் சொல்வது போல டெம்பரவரி பதவி இல்லை.

ஸ்டாலின் அவர்களே உங்களைத்தான் உங்கள் அப்பா கடைசி வரை நம்பாமல் டெம்பரவரி பதவியிலேயே வைத்திருந்தார் என விமர்சித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.

சென்னை வடபழனியில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலினின் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

மேலும் பேசிய அவர், அதிமுகவை தொண்டன் தான் தலைமை தாங்கி நடத்த வேண்டும். எடப்பாடி பழனிசாமி இல்லையென்றால் மேடையில் இருக்கும் யாரோ ஒருவர் தலைமைப் பதவிக்கு வருவார். எப்போதும் அதிமுக தொண்டர்களில் ஒருவன் தான் அதிமுகவுக்கு தலைமை தாங்குவான் எனப் பேசியுள்ளார் எடப்பாடி பழனிசாமி.

சென்னை வடபழனியில் பேரறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று பேசினார். அப்போது பேசிய அவர், “எனது பதவி தொண்டன் கொடுத்த பதவி. பர்மனன்ட் பதவி. ஸ்டாலின் சொல்வது போல டெம்பரவரி பதவி இல்லை. ஸ்டாலின் தான் தற்காலிக தலைவராக இருந்தார். ஸ்டாலின் அவர்களே உங்களைத்தான் உங்கள் அப்பா கடைசி வரை நம்பாமல் டெம்பரவரி பதவியிலேயே வைத்திருந்தார்.” என முதல்வர் ஸ்டாலினின் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசினார்.

மேலும், “இனி அதிமுகவை தொண்டன் தான் தலைமை தாங்கி நடத்த வேண்டும். எடப்பாடி பழனிசாமி இல்லையென்றால் மேடையில் இருக்கும் யாரோ ஒருவர் தலைமைப் பதவிக்கு வருவார். அவர்களும் இல்லை என்றால் இங்கே குழுமி இருக்கும் அதிமுக தொண்டர்களில் ஒருவன் தான் அதிமுகவுக்கு தலைமை தாங்குவான். ரத்தத்தை வியர்வையாகச் சிந்தி உழைக்கிறானே தொண்டன் அவன் கட்சிக்குத் தலைவனாக எதிர்காலத்தில் வர முடியும்.” என்றார்.

மேலும் அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை புள்ளி விவரங்களுடன் மேடையில் காண்பித்து பேசினார் எடப்பாடி பழனிசாமி. அவர் பேசுகையில், “32 ஆண்டு காலம் தமிழ்நாட்டில் சிறப்பான ஆட்சியை கொடுத்த கட்சி அதிமுக. கல்வியில் சிறக்கும் மாநிலம் தான் வளர்ச்சி அடையும். அதனால் அத்தகைய தரமான கல்வி கிடைக்க தமிழ்நாட்டில் அதிகமான கல்லூரிகளை திறந்தவர் எம்.ஜி.ஆர். தொடர்ந்து ஜெயலலிதா கல்விக்கு அதிகம் நிதி ஒதுக்கீடு செய்து கல்வித்துறையில் செய்த புரட்சியின் காரணமாக தமிழ்நாடு கல்வித்துறையில் முதன்மை மாநிலம் என்ற இலக்கை அடைந்தது.

நான் முதலமைச்சராக இருந்தபோது 7 சட்டக்கல்லூரிகள், 11 மருத்துவ கல்லூரிகளை கொண்டு வந்தேன். திமுக அரசு பதவியேற்று 15 மாதம் ஆகியும் ஒரு கல்லூரியையும் கொண்டு வரவில்லை. மாணவர்களுக்கு அறிவுப்பூர்வமான கல்வி கிடைக்க அதிமுக ஆட்சியில் மடிக்கணினி மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. ஆனால் அறிவுப்பூர்வமான கல்வி கிடைத்தால் ஓட்டு கிடைக்காது என்ற ஒரே காரணத்துக்காக மடிக்கணினி வழங்கும் திட்டத்தை திமுக அரசு நிறுத்தியுள்ளது.

நாள்தோறும் 63 லட்சம் குழந்தைகளுக்கு சத்துணவு அளித்தவர் எம்.ஜி.ஆர். அதனை தொடர்ந்து மலிவு விலையில் உணவு கிடைக்கும் வகையில் ஜெயலலிதா, அம்மா உணவகத்தை கொண்டு வந்தார். அம்மா உணவக்கத்தை தற்போதைய அரசு மூட நினைத்தால் அதற்கான பதிலடியை மக்கள் தேர்தலில் கொடுப்பார்கள். மக்கள் நிச்சயம் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.” எனச் சாடியுள்ளார்.

மேலும், 15 மாத திமுக ஆட்சியில் மக்களுக்கு கிடைத்த பலன் வேதனையும் துன்பமும் தான். உழைப்பாளியை கேட்டால் தான் AM, PM என்றால் என்னவென்று தெரியும். வாக்கிங் போவது, சைக்கிளிங் போவது டீ குடிப்பதை மட்டும் தான் தமிழக முதலமைச்சரின் மினிட் டு மினிட் வேலை. மக்கள் நலனில் அக்கறையில்லை என விமர்சித்துள்ளார்.