சில தினங்களுக்கு முன்பு ஆம் ஆத்மீ கட்சியிலிருந்து விலகி ஏழு மாநிலங்களவை உறுப்பினர்கள் பாஜாகாவில் இணைந்தனர்.
இது தேசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதனைத் தொடர்ந்து, விலகிச் சென்ற உறுப்பினர்கள் ஆம் ஆத்மீ தலைமை குறித்து பல்வேறு விமர்சனங்களை முன் வைத்திருந்தனர். அதே நேரத்தில், ஆம் ஆத்மீ தரப்பில் இருந்து விலகிச் சென்ற உறுப்பினர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டன. மேலும், அவர்கள் துரோகிகள் என்றும் ஆம் ஆத்மீ கட்சியினரால் வர்ணிக்கப்பட்டனர். முன்னாள் கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங், ஆம் ஆத்மீ கட்சியின் சார்பில் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். ஆம் ஆத்மீ கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த ஏழு மாநிலங்களவை உறுப்பினர்களில் இவரும் ஒருவர் ஆவார். இந்த மாநிலங்களவை உறுப்பினர்களின் செயலை கண்டித்து ஆம் ஆத்மீ கட்சி தொண்டர்கள் அந்த உறுப்பினர்களின் வீடுகள் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த வரிசையில் ஹர்பஜன் வீட்டின் முன்பும் ஏராளமான தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், அவர்களின் வீட்டுச் சுவர்களில் துரோகிகள் என்று எழுதினர். இது பஞ்சாப் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்த சூழலில் ஹர்பஜன் சிங்கிற்கான பாதுகாப்பை மாநில அரசு விலக்கிக்கொண்டதாகக் கூறப்படுகிறது. முன்னதாக, அவருக்கு 10 காவலர்களைக் கொண்ட பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. ஆனால், தற்போது அந்த பாதுகாப்பு விலக்கிக்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், தற்போது அங்குப் பதற்றமான சூழல் நிலவுவதால், அவரது வீட்டின் முன்பு ஆயுதப்படை காவல்துறையினர் பாதுகாப்பிற்காகக் குவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.








