முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவருடன் சென்றிருப்பவர்கள் துபாயில் எங்கு செல்கிறார்கள் என்ன செய்கிறார்கள் என்பதை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூகுள் மூலம் பார்த்துக் கொண்டே இருக்கிறார் என கராத்தே தியாகராஜன் கூறியுள்ளார்.
அவர்கள் அங்கு என்ன செய்கிறார்கள் என்று எங்களுக்கு நன்கு தெரியும் என்றும், ஸ்டாலின் துபாய் விவரம் குறித்த அனைத்து பைல்களையும் ஆளுநர் எடுத்துவிட்டார் என்றும் கராத்தே தியாகராஜன் கூறியுள்ளார்.
திமுக ஆட்சிக்கு வந்தது முதல் பாஜக திமுக அரசையும், முதல்வர் ஸ்டாலினையும் மிகக் கடுமையாக விமர்சித்து வருகிறது. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை திமுக அமைச்சர்கள் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியிலிருந்து பாஜக சென்றுள்ள சென்னை முன்னாள் மேயர்களில் ஒருவரான கராத்தே தியாகராஜன் தன் பங்குக்கு திமுக அரசை கடுமையாகத் தாக்கியும் விமர்சித்தும் பேசிவருகிறார். அவரது பேச்சுக்கள் பெரும்பாலும் திமுகவை எச்சரிக்கும் தொனியில் இருந்து வருகிறது.
பிரதமர் மோடி பஞ்சாப் மாநிலம் சென்றிருந்தபோது அவருக்கு பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்ட நிலைகள் அதை கண்டித்து பாஜகவினர் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர் அப்போதும்கூட முதல்வர் ஸ்டாலினை விமர்சித்தே கராத்தே தியாகராஜன் பேசினார், அதாவது, ஸ்டாலின் செல்லும் கான்வாயை தங்களாலும் மரிக்க முடியும் என்றும், தாங்கள் நினைத்தால் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும் என்றும், தங்களுக்கும் எல்லா ஜிக்ஜாக் வேலைகளும் தெரியும் என்றும் அவர் எச்சரித்து பேசியிருந்தார். அதேபோல் உள்ளாட்சித் தேர்தலின்போது சேகர்பாபு குறிப்பிட்டுப் பேசிய அவர், சேகர்பாபு, மா.சுப்பிரமணியன் போன்றோர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றுவதற்கு திட்டமிடுகிறார்கள், அதை பாஜகவினர் முறியடிக்க வேண்டும், எல்லாவற்றிற்கும் நாம் தயாராக இருக்க வேண்டும் என எச்சரித்திருந்தார்.
வாய்ப்புக் கிடைக்கும் பொதெல்லாம் திமுகவை குறிப்பாக முதல்வர் ஸ்டாலினை விமர்சிப்பதில் கராத்தே தியாகராஜன் குறியாக இருந்து வருகிறார். இந்நிலையில்தான் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் துபாயில் நடைபெற்று வரும் தொழிற் கண்காட்சியை பார்வையிட சென்றுள்ளார், அங்கே தமிழ்நாட்டின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்கை திறந்து வைத்துள்ள அவர், பல்வேறு அயல்நாட்டு தொழில்முனைவோர்கள் சந்தித்து தமிழகத்தில் தொழில் முதலீடுகளை ஈர்த்து வருகிறார். முதல்வரின் இந்த முயற்சியை பலரும் பாராட்டி வருகின்றனர். ஆனால் பாஜகவினர் இழித்தும் பழித்தும் கூறி வருகின்றனர். அந்தவகையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முதல்வர் ஸ்டாலின் துபாய் பயணம் தமிழ்நாட்டு மக்களின் பணத்தை பெருக்குவதற்கு அல்ல, தனது குடும்பத்தை பெருக்குவதற்கு, குடும்ப சொத்தை பெருக்குவதற்கு தான் ஸ்டாலின் துபாய் சென்றுள்ளார் என விமர்சித்துள்ளார்.
தமிழக அரசின் பட்ஜெட்டை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ஆர்பாட்டத்தில் அண்ணாமலை முதல்வரின் துபாய் பயணத்தை இவ்வாறு விமர்சித்தார். அவருடன் கலந்து கொண்டு பாஜகவை சேர்ந்த கராத்தே தியாகராஜனும் இதே பாணியில் முதல்வரை விமர்சித்தார். அவர் மேடையில் பேசியதாவது, எங்கு பார்த்தாலும் திமுக கொடி பறக்க்கிறது. வருங்காலத்தில் கோட்டையில் நிச்சயம் பாஜக கொடி பறக்கும். முதல்வர் ஸ்டாலின் துபாய் சென்றுள்ளார், அந்த பைல்ஸ் எல்லாத்தையும் கவர்னர் ஏற்கனவே எடுத்து விட்டார். ஸ்டாலினும் அவருடன் சென்றவர்களும் துபாயில் எங்கு செல்கிறார்கள் என்ன செய்கிறார்கள் என்று எங்களுக்கு தெரியும். தலைவர் அண்ணாமலை கூகுள் மூலம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார். இவ்வாறு கராத்தே தியாகராஜன் பேசினார்.
Leave a Reply