ஜெல்லி’ மீன்களால் மயிரிழையில் பறிபோன பெங்களூர் நீச்சல் வீராங்கனையின் கனவு…

கனவு கண்டுவிட்டால் போதும். அது நம்மை எடுத்துக்கொள்ளும் இல்லையா.! பெங்களூரைச் சேர்ந்த நீச்சல் வீராங்கனை சுஜாதாவுக்கு ஒரு கனவு இருந்தது.

இது உண்மையிலேயே கனவு லட்சியம்தான் என்று சொல்லும் அளவுக்கான கனவு அது. ராமேஸ்வரம் தனுஷ்கோடியில் இருந்து இலங்கை தலைமன்னார் வரை நீந்திச்செல்வது. இதோடு நிற்கவில்லை சுஜாதா. மீண்டும் கையோடு தலைமன்னாரில் இருந்து ராமேஸ்வரம் தனுஷ்கோடி திரும்புவது என முடிவு செய்தார். இலங்கை தலைமன்னார் மற்றும் தனுஷ்கோடி இடையே உள்ள கடல் பகுதியின் தூரம் 28 கிலோ மீட்டர். இந்த தூரத்தை இந்தியா மற்றும் இலங்கையைச் சேர்ந்த பலர் நீந்தி சாதனை படைத்துள்ளனர். இதுவரை சாதனை படைத்த அனைவருமே இலங்கையிலிருந்து இந்தியா வந்தனர் அல்லது இந்தியாவிலிருந்து இலங்கை வரை நீந்திச்சென்றுள்ளனர்.

இதே சாதனையை தானும் படைக்க வேண்டுமா ? என்ற கேள்வியை தனக்குள் கேட்டுக்கொண்டார் சுஜாதா. இதனால்தான், தனுஷ்கோடி டூ இலங்கை தலைமன்னார் ; பிறகு தலைமன்னார் டூ தனுஷ்கோடி என்று 56 கிலோ மீட்டர் தூரத்தை கடக்கும் அசாத்திய துணிவைக் கையிலெடுத்தார். இதுவரை யாருமே செய்யாத இந்த முயற்சியை, செய்துபார்க்கத் துணிந்து களத்தில் இறங்கினார் சுஜாதா. அந்த சாதனை முயற்சியை நேற்றுத் தொடங்கினார். அதாவது, நேற்று புதன்கிழமை காலை 8.23 மணிக்கு இந்தியாவின் தனுஷ்கோடியில் இருந்து நீந்தத் தொடங்கினார். விடா முயற்சியுடன் தொடர்ச்சியாக நீந்திய சுஜாதா, 10 மணி நேரம் 9 நிமிடங்கள் நீந்தி இலங்கை தலைமன்னாருக்கு சென்றார். சரியாக, மாலை 6:33 மணிக்கு வெற்றிகரமாக தலைமன்னாரை அவர் அடைந்தார். பின்பு, மீண்டும் தலைமன்னாரில் இருந்து தொடர்ச்சியாக தனுஷ்கோடிக்குத் திரும்பி நீந்திக் கொண்டிருந்தார். இந்திய எல்லை தனுஷ்கோடிக்கு வர இன்னும் நான்கு கிலோ மீட்டர் தூரம்தான் இருந்தது. அப்போது நேரம் சரியாக நள்ளிரவு 2.09 மணி. தனுஷ்கோடியை நெருங்கி வரும் போது சுஜாதாவின் உடலை ‘ஜெல்லி’ மீன்கள் சூழ்ந்துகொண்டு கடிக்க ஆரம்பித்தது. அதையும் பொருட்படுத்தாமல் நீந்த முயன்றார் சுஜாதா. ஆனால், அவரது உடம்பில் அலர்ஜி போன்ற அரிப்பு ஏற்பட்டதால் ஓரளவுக்கு மேல் அவரால் நீந்த முடியவில்லை. இதனால் மயிரிழையில் தனது கனவை சுஜாதா இழந்தார்.

ஆனாலும், தொடர்ச்சியாக 17 மணி நேரம் 34 நிமிடங்கள் விடாப்படியாக கடலில் 42 கிலோ மீட்டர் தூரம் வரை நீந்திச் சாதனைப் படைத்துள்ளார் சுஜாதா. அதுமட்டுமல்லாமல் இடையிடையே ராமேஸ்வரம் மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்ததாலும் நீந்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார். அடுத்த முறை நிச்சயம் முயற்சிப்பேன் என்று விடா தன்னம்பிக்கையுடன் சொன்ன சுஜாதா, அடுத்த முறை இந்த சாதனையை முயற்சிக்கும் போது மீனவர்கள் கடலுக்கு செல்லாத நாட்களில் அனுமதி தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

சுஜாதாவின் சாதனைகள் ;

1. 2019 இந்தியன் எலைட் மாரத்தான் நீச்சல் போட்டியில், உலகத்திலேயே மிக நீளமான திறந்தவெளி நீச்சல் போட்டியில் கலந்து கொண்டு 81 கிலோ மீட்டர் தூரத்தை 12 மணி நேரத்தில் கடந்த, கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஒரே பெண் என்ற பெருமைக்குரியவர்.

2. 2022 ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலம் வொர்லி முதல் ‘கேட் வே ஆப் இந்தியா’ வரையான 36 கிலோ மீட்டர் கடல் பகுதியை 8 மணி நேரம் 45 நிமிடங்களில் கடந்து சாதனை படைத்துள்ளார்.

3. National Institue Of India மற்றும் Sports Authority Of India-ன் அங்கீகரிக்கப்பட்ட நீச்சல் பயிற்சியாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.