நர்சரி, மழலையர் பள்ளிகள் திறப்பு எப்போது..? அரசின் முடிவு என்ன?..

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் கடந்த 2020ஆம் ஆண்டு முதல் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

தற்போது கொரோனா 3-வது அலை பரவி வருகிறது. இதன் காரணமாக நோய்த் தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு காலக்காலத்தில் அனைத்து வகையான பொது நடவடிக்கைகளுக்கும் தடை செய்யப்பட்டது. ஆனால் நடுவில் கொரோனா தொற்று பாதிப்புகள் குறைந்த சமயங்களில் மற்ற அனைத்து நடவடிக்கைகளும் முறையான கட்டுப்பாடுகளுடன் மீண்டும் அனுமதிக்கப்பட்டது.

இதையடுத்து கல்வி நிலையங்களில் கடந்த வருடம் முன்னதாக 10 -12 வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்ட நிலையில், கடந்த செப்டம்பர் மற்றும் நவம்பர் மாதங்களில் முறையே 9 முதல் 12ம் வகுப்பு மற்றும் 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டது. ஆனால் இதுவரையிலும் மழலையர் மற்றும் நர்சரி வகுப்புகள் திறக்க அனுமதி வழங்கவில்லை. கடந்த வாரம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் இருந்த பல கொரோனா கட்டுப்பாடுகளையும் நீக்கி, நர்சரி மற்றும் விளையாட்டு பள்ளிகளை பிப்ரவரி 16ம் தேதி(நாளை) முதல் திறக்க அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அவ்வாறு அரசு அனுமதி வழங்கியிருந்தாலும், நர்சரி பள்ளிகளின் முதல்வர்கள் தற்போது பள்ளிகளை திறக்க தயாராக இல்லை. ஏனெனில் பள்ளிகளின் உட்கட்டமைப்புகளை சீரமைத்தல், ஆசிரியர்கள், குழந்தை பராமரிப்பாளர்களை நியமித்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. இவர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத சூழல் நீடித்ததால் அவர்களை பணி நீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது. இவை அனைத்தும் மீண்டும் ஒரு சில தினங்களில் சரி செய்ய முடியாது என்றும், அதற்கான நிதி நிலை இல்லை என்றும், பள்ளிகள் திறப்பு தொடர்பாக தீர்க்கமான முடிவு எடுக்க முடியாததால் மீண்டும் அதிக அளவு முதலீடு செய்ய தயாராக இல்லை என்றும் தமிழகம் முழுவதும் உள்ள பல நர்சரி பள்ளிகளின் முதல்வர்கள் அறிவித்துள்ளனர்.